கோவையில் இருந்து நேரடியாக சீரடிக்கு தனியார் பங்களிப்புடன் நாளை (14/06/2022) முதல் ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில், இந்த ரயிலில் அப்படி என்ன ஸ்பெஷல்? ரயில் பயணத்திற்கான கட்டணம் என்ன? போன்ற விவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
மத்திய அரசின் கீழ் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான, ரயில்வே துறையில் இனி ரயில்களை வாடகைக்கு எடுக்கலாம் என அறிவித்து, கடந்த நவம்பர் மாதம் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தது இந்தியன் ரயில்வே துறை. 'பாரத் கவுரவ்' என்று அறிமுகமாகியுள்ள இந்த திட்டத்தின் நோக்கம், தனியார் பங்களிப்புடன் சுற்றுலாவைப் பிரபலப்படுத்துவது தான். வாடகைக்கு ரயிலை எடுப்பதின் மூலம் டிக்கெட் கட்டணத்தை சுற்றுலா ஆப்ரேட்டர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் ஆஃபர்.
அதிலும், ஆன்மீக பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் ஆக அமையவிருக்கிறது இந்த சிறப்பு ரயில்வே திட்டம். அந்த வகையில் கோவையில் இருந்து சீரடிக்கு வாராந்திர ரயில் சேவை நாளை (14/06/2022) முதல் தொடங்கவிருப்பது சாய்பாபா பக்தர்களை மகிழ்வித்துள்ளது.
அதுவும், இந்த ரயில் சேவை ஆந்திர மாநிலம் வழியாக வழியாக மகாராஷ்டிரா செல்லவிருப்பதால், சாய்பாபாவோடு சேர்த்து ஆந்திராவில் உள்ள ராகவேந்திரா சுவாமி கோயில் அமைந்துள்ள மந்திராலயத்திற்கும் பக்தர்கள் சிரமமின்றி சென்று வர முடியும். இப்படி ரிலாக்ஸாக சாய்பாபாவைச் சென்று தரிசித்து வர ரயில் கட்டணம் மற்றும் பேக்கேஜ் கட்டணம் என இரண்டு விதமான கட்டணங்கள் உள்ளன.
பேக்கேஜ் என்பது கோவையில் இருந்து சீரடிக்கு சென்று திரும்பும் ரயில் கட்டணத்துடன் சேர்த்து, சீரடியில் சிறப்பு தரிசனம், மூன்று பேர் தங்கும் ஏசி ரூம் வசதி, டூர் வழிகாட்டி மற்றும் பயண இன்சூரன்ஸ் ஆகியவை அடங்கும். ஆனால் உணவு மற்றும் ஆந்திராவில் உள்ள மந்திராலயம் கோயிலில் தரிசிக்க வேண்டும் என்றால், அதற்கு தனிக்கட்டணம் செலுத்த வேண்டும்.
கோவை- திருப்பூர்- ஈரோடு- சேலம்- பெங்களூரு- மந்திராலயம் வழியாக சீரடி செல்லும், இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் பெறுவது மிகவும் சுலபம், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து சாய்பாபா கோயில்களிலும் பயண டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
தனது முதல் பயணத்திற்கு ஆயத்தமாகியுள்ள கோவை டூ சீரடி ரயில் கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ரயிலில் பயணிக்க செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறித்துப் பார்ப்போம்!
ரயில் கட்டணமாக ஸ்லீப்பருக்கு ரூபாய் 2,500, மூன்றாம் வகுப்பு ஏசியில் பயணிக்க ரூபாய் 5,000, இரண்டாம் வகுப்பு ஏசியில் பயணிக்க ரூபாய் 7,000, முதல் வகுப்பு ஏசியில் பயணிக்க ரூபாய் 10,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பேக்கேஜ் கட்டணமாக, ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்க ரூபாய் 4,999, மூன்றாம் வகுப்பு ஏசியில் பயணிக்க ரூபாய் 7,999, இரண்டாம் வகுப்பு ஏசியில் பயணிக்க ரூபாய் 9,999, முதல் வகுப்பு ஏசியில் பயணிக்க ரூபாய் 12,999 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.