அண்மையில் சில இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் பட்டாகத்திகளை கொண்டு கேக் வெட்டுவது மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது தொடர்பான புகார்கள் மீது கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. அதேபோல் பொது இடங்களில் இடையூறு ஏற்படும் வகையில் பிறந்தநாள் கொண்டாடியதற்காக கைது செய்யப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் நடு சாலையில் கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதோடு, சாலையில் கேக்கை கொட்டிய இளைஞர்களை போலீசார் கண்டித்த வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் சாலையில் சில இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாடிய போது கேக்கை சாலையில் கொட்டி வீணடித்தனர். இதனை கவனித்த காவலர் ஒருவர், இளைஞர்களை அழைத்து சாலையில் கொட்டப்பட்ட கேக்கை அவர்களே சுத்தம் செய்ய அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து இளைஞர்கள் சாலையில் ஒட்டிக்கொண்டிருந்த கேக்கை அகற்றினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.