Skip to main content

“இதில் பாடம் வேறு நடத்தப்படுகிறது..” - அண்ணாமலைக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் 

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா கடந்த மாதம் இறுதியில் 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார். அந்தப் பயணத்தில், மதுரையின் பாஜக பல்துறை வல்லுனர்களின் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அதில் ஜெ.பி நட்டா, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் நிறைவடைந்துள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார்” எனக் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த நிலத்தை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் எம்.பி மாணிக்கம்தாகூர் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் எம்.பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜகவின் அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% நிறைவேறிவிட்டதாகவும் விரைவில் பிரதமர் அதை நாட்டிற்கு அர்பணிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். பெரிய அதிர்ச்சியாக இருந்தது. போன வாரம் கூட(செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரம்) மத்திய சுகாதாரத்துறையின் அதிகாரிகள் இன்னும் ஆரம்ப வேலையே நடக்காமல் இருப்பதாக தெரிவித்தனர். போன வாரம் கூட எம்.பி. மாணிக்கம்தாகூர் பார்த்த போது ஒரு வேலையும் நடக்கவில்லை. 

 

ஆனால் இடைப்பட்ட இந்த நான்கு நாளில் 95% பணிகள் முடிந்து விட்டதாக ஆளும் கட்சியினர் கூறியது அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வேளை இரவோடு இரவாக புல் புல் பறவைகளின் மூலம் கட்டி முடித்துவிட்டனரோ என்ற சந்தேகம் வந்தது. ஏனென்றால் இப்பொழுது அவர்கள் செய்யும் வேலைகள் எல்லாம் புல் புல் பறவைகளின் மூலமாகத்தான் செய்து முடிக்கிறார்கள். எனவே தான் நானும் மாணிக்கம் தாகூரும் நேரடியாக பார்வையிடலாம் என வந்தோம். இங்கு வந்து பார்த்தால் ஏற்கனவே இருந்த பெயர் பலகை கூட காணவில்லை” எனக் கூறினார். மேலும், அப்போதே இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்தியிருந்தார். 

 

இந்நிலையில், இன்று இமாச்சலப் பிரதேசத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.  அதன் பின்னர் பிலாஸ்பூர் பகுதியில் அமைந்துள்ள, 95% பணிகள் நிறைவடைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். 

 

இதனை மேற்கோள் காட்டி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “உண்மையாகவே 95 % பணிமுடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை அக். 5 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர். அதே 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் இன்னும் பொட்டல்காடாகவே இருக்கிறது. அந்த பொட்டல்காட்டைக் காட்டி 95 சதவிகிதம் என்றால் என்ன? என்று பாடம் வேறு நடத்தப்படுகிறது. ஜெ.பி. நட்டா சொன்ன 95 சதவிகிதப்பணி அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த பிலாஸ்பூரில் தான் நடந்துள்ளது என்பதை அண்ணாமலை அறிக” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்