வேன் மீது மோதி சாலை விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவரின் உயிரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியிருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன தொழில்நுட்பம் மனிதர்களுக்குப் பல்வேறு வகையில் உதவி புரிகிறது. அந்த வகையில், இளைஞர் ஒருவரின் உயிரை இந்த தொழில்நுட்ப வளர்ச்சி காப்பாற்றியுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்தவர் பிட்ரி. தனியார் துறையில் வேலை பார்க்கும் அவர், வேலை சம்பந்தமாக இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது வேகமாக சென்றுகொண்டிருந்த நிலையில் குறுக்கே வேன் ஒன்று வர, அதில் மோதி அவர் தூக்கியெறியப்பட்டார். அப்போது அவர் கையில் ஆப்பிள் வாட்ச் கட்டியிருந்தார். அந்த வாட்ச் ஆபத்து நேரங்களில் அவசர உதவி எண்களுக்கு சிக்னல் அனுப்பும் எஸ்ஓஎஸ் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததால், அவரின் இருப்பிட தகவல் அனைத்தும் அவசர எண் உதவி மையத்திற்குச் சென்றுவிடும். இதற்காக அவர் வாட்சில் இருக்கும் பட்டனை பிரஸ் செய்யலாம் அல்லது விபத்தில் ஏற்படும் அதிர்வுகளை உள்வாங்கி ஆப்பிள் வாட்ச் தானாகவே அவசர உதவி மையத்திற்குத் தகவல்களை அனுப்பிவிடும்.
விபத்து ஏற்பட்ட உடன் பிட்ரியின் தகவல் அனைத்தும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டு அவசர உதவி மையத்திற்குச் சென்றதையடுத்து, அங்கிருந்து ஊழியர்கள் வந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். குறிப்பிட்ட நேரத்தில் வந்ததால், அவர் தற்போது காப்பாற்றப்பட்டு நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.