ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி பகுதியில் அமைந்துள்ளது எலுரு மண்டலத்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாயில் நுரை தள்ளுவதோடு மயக்கமடைந்தும் விடுகிறார்கள். இவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த மர்மநோய் எதனால் ஏற்பட்டது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நோயினால் பாதிக்கபட்டவர்களுக்கு குமட்டல், வலிப்பு மற்றும் மயக்கம் ஆகிய அறிகுறிகள் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களில் சிலர் திடீர், திடீரென ஒலி எழுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன் மோகன், எலுரு அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்தநிலையில், எலுரு பரவிவரும் மர்ம நோய்க்கு, பூச்சிக் கொல்லிகள் மற்றும் கொசு மருந்துகளில் பயன்படுத்தப்படும், ஆர்கனோக்கோளோரிக் என்ற வேதிப்பொருள் காரணமாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், அதன் முடிவுகள் வந்ததும் இந்த மர்ம நோய்க்கான காரணம் உறுதியாகத் தெரியும் எனவும் சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.