Skip to main content

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும்... சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

Published on 18/08/2020 | Edited on 18/08/2020
hc

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு உத்தரவிட்டது. 

 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. 

 

ஆலைக்கு சீல் வைத்ததை எதிர்த்தும், ஆலையை திறக்க அனுமதி கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

 

இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது. 2019 ஜூன் 27 முதல் சிறப்பு அமர்வில் வழக்கு விசாரணை துவங்கியது. 39 நாட்கள் விசாரணைக்கு பின், 2020 ஜனவரி 8ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

 

இந்த நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காணொலி காட்சி மூலம் பிறப்பித்தனர். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

 

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, தூத்துக்குடியின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். 

 

சார்ந்த செய்திகள்