சிவகாசியில் தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் “ஒரு விஷயத்தில் மட்டும் அரசியல்வாதிகள் நல்லவர்களாக இருக்கிறார்கள்.” என்றார். ‘என்ன சொல்ல வர்றீங்க?’ என்று கேட்டபோது, “அரசியல் என்றாலே பொதுவாழ்க்கைதான்! எப்போதும் பயணித்தபடியே இருப்பார்கள். குறிப்பாக, சாலை மார்க்கத்தில் செல்லும்போது, மனிதாபிமானத்துடன் நடந்துகொள்கிறார்கள். விபத்து என்பது அடிக்கடி நடக்கிறது. செல்லும் வழியில், அப்படி ஒரு விபத்தை அரசியல்வாதிகள் பார்த்துவிட்டால், உடனே காரில் இருந்து இறங்கி, விபத்துக்கு ஆளானவர்களை மருத்துவமனைக்கு அனுப்புவது போன்ற காரியங்களைச் செய்துவிட்டுத்தான், அந்த இடத்திலிருந்து கிளம்புகிறார்கள். அரசியல்வாதிகள் குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், ஆபத்துக்கு உதவுகின்ற மனிதநேயத்தை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.” என்றார்.
அந்த சம்பவம் கற்றுத் தந்த பாடம்!
அந்த மருத்துவமனையின் மேலாளர் நம்மிடம் “சாலை விபத்துக்களால் பரிதவிப்போருக்கு அரசியல் தலைவர்கள் உதவுவதென்பது, காலம் காலமாக நடந்து வருவதுதான். ஆனாலும், 2010-ல் நடந்த ஒரு சம்பவம்தான், அரசியல் தலைவர்கள் பலருக்கும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது.” என்றார்.
அது என்ன சம்பவம்?
திருநெல்வேலி மாவட்டம் – ஆழ்வார்குறிச்சி காவல்நிலைய சார்பு ஆய்வாளராக இருந்தார் வெற்றிவேல். அம்பை – தென்காசி சாலையில், ஆம்பூர் அருகே ஒரு கும்பல், வெற்றிவேலை அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்கிவிட்டுச் சென்றது. ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாகச் சென்ற அன்றைய திமுக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், மைதீன்கான், கலெக்டர் ஜெயராமன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், சாலையில் கிடந்து வெற்றிவேல் துடிப்பதைக் கண்டு வாகனங்களை விட்டு இறங்கினர். ஆனாலும், தங்களது வாகனத்தில் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவில்லை.
108 ஆம்புலன்ஸுக்கு தகவல் சொல்லிவிட்டு, காத்திருந்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமான நிலையில், 20 நிமிடங்களுக்குப் பிறகே, அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வெற்றிவேலைக் கொண்டு சென்றனர். சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்து போனார். அந்த சம்பவத்தை சேனல்கள் ஒளிபரப்பின. அந்தப் பதிவில், உதவுங்களேன் என்று கை நீட்டிய வெற்றிவேலுக்கு அமைச்சர்கள் உதவாமல் இருந்த காட்சியும் வெளியானது. கடும் விமர்சனங்கள் எழுந்தன.
விபத்தில் சிக்கியவர்களுக்கு அரசியல் தலைவர்கள் உதவிக்கரம் நீட்டிய சில சம்பவங்களைப் பார்ப்போம்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இயல்பாகவே மனிதநேயம் மிக்கவர். செல்லும் வழியில் சாலை விபத்தைக் காண நேரிட்டால், காரைவிட்டு இறங்கி, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அவரே முன்னின்று செய்வார். கடந்த மாதம், கோவை மதுக்கரை அருகில், பாலக்காடு நெடுஞ்சாலையில், அப்பளம் போல் நொறுங்கிக் கிடந்தது ஒரு கார். அதை ஓட்டி வந்த இளைஞரை ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு, கோவை அரசு மருத்துவமனை இயக்குநரை தொடர்புகொண்ட வைகோ, தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கடந்த 1-ஆம் தேதி கிருஷ்ணகிரியிலிருந்து சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது வடசேரி பிரிவு அருகில், டூ வீலரில் வந்த ஒருவர், விபத்தில் சிக்கி காயமடைந்து கிடந்தார். காரிலிருந்து இறங்கிய முதலமைச்சர், அந்த நபரை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கடந்த மாதம், தொண்டாமுத்தூரிலிருந்து செல்வபுரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பேரூர் எல்.ஐ.சி. காலனி அருகே, படுகாயமுற்று கிடந்த முதியவர் ஒருவருக்கு உதவினார்.
பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் ரோடு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார் மு.க.ஸ்டாலின். அங்கே டூ வீலரில் சென்ற ஒருவர் விபத்தில் சிக்கி, காயங்களுடன் கிடந்ததைப் பார்த்தார். உடனே, தன்னுடன் வந்த தொண்டர்கள் உதவியுடன் அவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தேனி மாவட்டத்தில் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட கனிமொழி, விமானத்தைப் பிடிப்பதற்காக மதுரைக்கு புறப்பட்டார். அப்போது, சாலையில் சிலர் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். உடனே காரை நிறுத்தச் சொல்லிய கனிமொழி, அங்கு விபத்தில் அடிபட்டுக் கிடந்தவரை, திமுக மாவட்ட செயலாளர் ஒருவரின் காரில் ஏற்றி, மருத்துவமனையில் சேர்த்தார்.
யாராவது விபத்தில் சிக்கியதைப் பார்த்துவிட்டால், அந்த இடத்தை விட்டு நகரமாட்டார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி. லக்னோ விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, கபீர்பூர் என்ற இடத்தில் ஜெயந்த்சிங் என்ற இளைஞர் விபத்தில் சிக்கில், சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனே, தன்னுடன் வந்த ஆம்புலன்ஸில் இருந்த டாக்டர்கள் மூலம் அவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அதே ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தார்.
சிவகாசி தனியார் மருத்துவமனையில், அரசியல் தலைவர்களின் உதவும் மனப்பான்மை குறித்த பேச்சு ஏன் வந்தது தெரியுமா?
நேற்று (8-7-2018) சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, வையாலிங்கம் என்ற முதியவரும் மனோஜ் என்ற இளைஞரும் விபத்தில் சிக்கினார்கள். அந்த வழியே காரில் சென்ற அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அதிக அளவில் ரத்தம் வெளியேறி காயங்களுடன் கிடந்த மனோஜை உடனடியாக, போலீஸ் வாகனத்தில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சொற்ப காயங்களோடு இருந்த வையாலிங்கத்தை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால், அரசு மருத்துவமனையில் உடனடி சிகிச்சை கிடைக்காது என்பதாலேயே, மனோஜை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினார். மேலும், அந்த மருத்துவமனையின் டாக்டரை தொடர்புகொண்டு, “மனோஜுக்கு நல்லபடியாக சிகிச்சை அளியுங்கள். மருத்துவ செலவுக்கான பில்லை நான் செட்டில் செய்கிறேன்.” என்று கூறினார். ஆனையூர் ஊராட்சியில் வட்டார போக்குவரத்து அலுவலக பூமி பூஜை நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அங்கிருந்தபடியே தனியார் மருத்துவமனை சென்று, மனோஜுக்கு ஆறுதலும் கூறினார்.
வாக்காளர்களுக்கு ஒவ்வொரு நாளும் விபத்துதான்!
எங்கோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு நாள், விபத்தில் சிக்கியவருக்கு உதவும் நல்லுள்ளம் கொண்ட அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்! ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வரும் பொதுத் தேர்தல் என்பது, நல்லாட்சி கனவு காணும் மக்களைப் பொருத்தமட்டிலும் விபத்தாகவே அமைந்துவிடுகிறது. இனிவரும் காலங்களிலாவது, வழக்கம் போல், தேர்தலை விபத்தாக்கி விடாமல் இருப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது!
‘அட, இப்ப என்ன சொல்ல வர்றீங்க?’ என்று, கட்டுரையின் நோக்கம் புரியாமல், கேள்வி கேட்பவர்கள் யாராவது இருந்தால், உடைத்தே சொல்லிவிடுகிறோம். அடிப்படையில், தனிப்பட்ட முறையில், அரசியல் தலைவர்கள் பலரும் நல்லவர்களே! ஓட்டுக்கு பணம், ஊழலுக்காகவே ஆட்சி என்ற மோசமான நடைமுறை இனியும் தொடர வேண்டாம்!