அரசு வழக்கறிஞருக்கு இவ்வளவு... ஹலோ போலீசுக்கு இவ்வளவு... ஐ.ஜி.மனைவிக்கு இவ்வளவு.. என தங்களுடைய காவல்நிலையம் மூலம் செலவழித்த தொகையை, செலவினப் பட்டியலாக வாட்ஸ் அப் குழுவில் வெளியிட்டுள்ளார் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. ஒருவர். இதனால் தமிழக காவல்துறை வட்டாரமே கிடுகிடுத்துள்ளது.
சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், தேவகோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய காவல்துறை துணைச்சரகங்களிலேயே முக்கியமானது காரைக்குடி துணைச்சரகம். இந்த காவல்துறை துணைச்சரகத்தில் மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் தவிர்த்து காரைக்குடி வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலையங்கள், அழகப்பாபுரம், சோமநாதபுரம், குன்றக்குடி, பள்ளத்தூர், சாக்கோட்டை மற்றும் செட்டிநாடு காவல் நிலையங்கள் உள்ளன. இதில் மறைமுகமாக லஞ்சப்பணமாக அதிக வருவாயை ஈட்டித்தருவது காரைக்குடி வடக்கு காவல் நிலையம் என்கின்றது புள்ளி விபரங்கள். இதனாலயே இந்த காவல்நிலையத்திற்கு போட்டி போட்டு வேலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் பலர் உண்டு. இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உட்பட 80 போலீசார் பணியாற்றக்கூடிய இந்த ஸ்டேஷனை பொறுத்தவரை கடந்த 4 மாதமாக ஒரு இன்ஸ்பெக்டர் கூட பணி நியமனம் செய்யப்படவில்லை. அதுபோக, 50க்கும் குறைவானவர்களே இங்கு பணியாற்றி வருகின்றனர்.
18/06/2018 அன்று 75980 35565 என்ற எண் மூலம் துவக்கப்பட்டதே KARAIKUDI NORTH PS என்ற வாட்ஸ் அப் குழு. 44 நபர்கள் கொண்ட இக்குழுவின் அட்மின் ஸ்டேஷன் ஆபிஸராகப் பணியாற்றும் எஸ்.ஐ.அரவிந்த்ராஜன். 02/09/2018 முதல் 27/09/2018 வரையிலான அந்த செலவினப் பட்டியலில், " HC 1371 தனபால் வண்டிக்கு டயர் மாற்ற ரூ.1000, Girl missing சம்பந்தமாக சென்னை சென்ற எஸ்.ஐ.க்கு ரூ.2000, அரசு வழக்கறிஞருக்கு ரூ. 500 HC 1055 வசம் கொடுத்தது என ஆரம்பித்து, ஹலோ போலீசுக்கு கொடுத்தது, விநாயகர் சதுர்த்தி டிபன் செலவு, வாட்டர் பாட்டில் செலவு என பட்டியல் நீண்டு, இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் விநாயகர் சதுர்த்தியின் போது பிள்ளையார்பட்டிக்கு சுவாமி கும்பிட வந்த தென்மண்டல ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன் மனைவி பர்சேஸ் செய்ததற்கு ரூ.3300 கொடுத்தது என்கிறது. இந்தப் பட்டியலைத்தான் ஸ்டேஷன் ஆபிஸரான எஸ்.ஐ.அரவிந்த்ராஜன், அவருடைய எண்ணான 75980 35565 மூலம் தங்களுடைய வாட்ஸ் அப் குழுவிலே வெளியிட்டு, அதிகாரிகளிடையே கலக்கத்தை உண்டாக்க, மேலதிகாரிகளை தன்வசம் வைத்துக் கொள்ளும் வித்தை வெளியானதுதான் உச்சம்.
எஸ்.ஐ.அரவிந்த் ராஜன்
முருகேஸ்வரி
அரசு தரப்பிலிருந்து ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் கொடுக்கப்படும் மாதாந்திர செலவுத் தொகையோ ரூ.3000 மட்டுமே. அப்படியிருக்க இவ்வளவு பணம் எப்படி வந்தது? "கடந்த 4 மாதங்களில் ஜூன் மாதம் 198, ஜூலை 219, ஆகஸ்ட் 191 மற்றும் செப்டம்பர் மாதத்தில் 186 என பாஸ்போர்ட்கள் விசாரணைக்காக வந்துள்ளன. பாஸ்போர்ட் என்கொயரிக்காக வரும் போது மக்களிடம் தலா ரூ.500-ஐ கட்டாயமாக வாங்க வேண்டுமென்பது எழுதப்படாத விதி. அப்படியென்றால் எவ்வளவு வருமானம் இதன் மூலம் மட்டும் வந்திருக்கும்? இத்தனை இந்தந்த போலீசாருக்கு என்று கொடுப்பது வழக்கம். காரைக்குடி வடக்குக் காவல்நிலையத்தைப் பொறுத்தவரை பாஸ்போர்ட் விசாரணைக்கு பொறுப்பாளரான முருகேஸ்வரி எனும் ஏட்டம்மா. அது போல், பொதுமக்களிடமிருந்துப் பெறப்படும் பணத்தைக் கொண்டு ஸ்டேஷனின் வரவு செலவு கணக்கை மெயிண்டெயின் செய்து ஸ்டேஷன் ஆபிஸரான எஸ்.ஐ.அரவிந்த்ராஜனிடம் ஒப்படைப்பதும் இவருடைய பணி. அப்படியிருக்கையில் கடந்த செப்டம்பர் மாதத்தின் வரவு செலவு கணக்கை எஸ்.ஐ.அரவிந்த்ராஜனிடம் ஒப்படைக்க, அவரோ, இதுதான் இந்த மாத கணக்கு என அதனை ஸ்டேஷனின் வாட்ஸ் அப் குழுவில் போட்டுவிட்டார். இதுதான் இப்பொழுது பூதாகரமாகியுள்ளது" என்கின்றனர் விபரமறிந்த போலீஸ்காரர்கள். இதனால் காவல்துறை வட்டாரமே கிடுகிடுத்துள்ளது என்பதுதான் உண்மை.