நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அந்த வகையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, தேமுதிக உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார், ஆணையர்களாக அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பதவி வகித்து வந்தனர். இதற்கிடையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான புதிய சட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு தேர்வு செய்யும் என்று கூறப்பட்டது.
இதனிடையே, தேர்தல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி ஓய்வு பெற்றார். தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த 9ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இந்த திடீர் ராஜினாமாவை அடுத்து, புதிய தேர்தல் ஆணையர்களாக இருவரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் டெல்லியில் இன்று (14-03-24) நடைபெற்றது.
இந்த தேர்வு குழுவில் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் உள்ளனர். காலை கூடிய இக்குழு, புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர் சிங் சாந்து ஆகியோரை தேர்வு செய்துள்ளது. இவர்களில், ஞானேஷ் குமார் கேரளா மாநிலத்தையும், சுக்பிர் சிங் சாந்து பஞ்சாப் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.