'உச்சந்தலை ரேகையிலே...' என சித் ஸ்ரீராமின் குரலில் பாடல் தொடங்கும்பொழுதே அது உயிருள்ள பாடல் என்ற உணர்வு நமக்கு வருகிறது. கபிலன் எழுதியுள்ள அந்தப் பாடல், கார்த்திக் ராஜாவின் இசையில் மிஷ்கினின் 'பிசாசு 2' படத்துக்காக உருவாகியுள்ள பாடல். இன்று (02/10/2021) வெளியாகியிருக்கிறது.
'வள்ளி படத்துக்கு இசையமைச்சது இவர்தான்', 'இளையராஜாவின் இசை வாரிசா வரப்போறவர்' என்றெல்லாம் அறிமுக காலத்தில் பேசப்பட்டவர், எதிர்பார்க்கப்பட்டவர் கார்த்திக் ராஜா. இப்போதும் ரசிகர்களின் 'அடிக்ஷனாக' இருக்கும் இளையராஜாவின் இளைய மகன் யுவனுக்கு முன்பே இசைப்பயணத்தை தொடங்கி பல ஹிட்களையும் கொடுத்தவர். மிகுந்த அழுத்தத்தை கொடுக்காமல், அதே நேரம் மேலோட்டமாகவோ, டெம்ப்ளேட் மெலடியாகவோ இல்லாமல் மனதை தொட்டு உறவாடும் பாடல்கள் கார்த்திக் ராஜாவின் ஸ்பெஷல்.
'உல்லாசம்' படத்தின் 'வீசும் காற்றுக்கு' பாடல் இந்த வகையின் சிறந்த உதாரணம். 'டும் டும் டும்' படத்தில் 'ரகசியமாய்..', 'உன் பேரை சொன்னாலே' இரண்டு பாடல்களும் இப்படி இருக்கும். அந்த காலகட்டத்திற்கு நவீனமான, அதிகம் பயன்படுத்தப்படாத ஒலி, மெட்டு வகையை பயன்படுத்தியிருப்பார் கார்த்திக் ராஜா. காதல் சோகம் என்று வந்துவிட்டால், கார்த்திக்கின் பாடல்களிலேயே அந்த வெறுமை தெரியும். 'உல்லாசம்' படத்தில் வரும் 'யாரோ யார் யாரோ...', 'உள்ளம் கொள்ளை போகுதே' படத்தின் 'கவிதைகள் சொல்லவா' (சோக வெர்ஷன்) இரண்டும் இந்த வகை.
கமல்ஹாசனின் 'காதலா காதலா', விஜயகாந்த்தின் 'அலெக்சாண்டர்' உள்ளிட்ட சில பெரிய படங்களுக்கும் இசையமைத்துள்ளார் கார்த்திக் ராஜா. ஆனாலும் இசையமைத்த படங்கள் பெரும் வெற்றியைப் பெறாமல் போனது உள்ளிட்ட காரணங்களால் பெரிய இடத்தை அடையமுடியாமல் போனது. தந்தை இளையராஜாவுக்கும் தம்பி யுவனுக்கும் அமைந்து, இவருக்கு அமையாமல் போனது சரியான கூட்டணி, நட்பு. இளையராஜாவின் ஆரம்பக் காலத்திலேயே பாரதிராஜா உள்ளிட்ட பலர் படத்தின் வெற்றி - தோல்வி தாண்டி தொடர்ந்து அவருடன் பயணித்தனர். அதையெல்லாம் விட, இளையராஜாவின் நுழைவு ஒரு சூறாவளி போல அமைந்து தமிழ் சினிமாவைத் திரும்பிப் பார்க்கவைத்தது. அந்த காலகட்டத்தில் அவரது இசை, அனைவரையும் அவரை தேடி வர வைத்தது. யுவனுக்கு அப்படி அல்ல... வெற்றிகள் மெதுவாகத்தான் வந்தன. செல்வராகவன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, அமீர் என்று ஆரம்பக் கால நட்புகள் வெற்றிக் கூட்டணியாக அமைந்து யுவனையும் வெல்ல வைத்தன.
இந்த இரண்டும் கார்த்திக் ராஜாவுக்குச் சரியாக அமையவில்லை. ஆனாலும், அவர் சில மிகச் சிறந்த பாடல்களைத் தந்துள்ளார். நல்ல படம் அமைந்தால் அவர் பயணம் தொடரும் என்று அவரது பாடல்களை ரசித்த பலர் காத்திருந்தனர். அப்படி ஒரு தருணமாக மிஷ்கின் அவரை 'பிசாசு 2'வில் அழைத்து வந்துள்ளார். 'உச்சந்தலை ரேகையிலே...' அந்த நம்பிக்கையை நமக்குத் தருகிறது.