ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரராஜே மகன் துஷ்யந்த்சிங் எம்.பி.யாக இருக்கிறார். பெண் பாடகர் ஒருவரின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வந்ததால் துஷ்யந்த்சிங்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உறுதி செய்யப்பட்ட நாளில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார் துஷ்யந்த்சிங்.
அவருக்கு தொற்று உறுதி செய்யப்படாத சூழலில், நாடாளுமன்றக் கூட்டத்திலும், நிலைக்குழு கூட்டத்திலும் கலந்துகொண்டார். இதனால் அந்தக் கூட்டங்களில் அவருக்கு நெருக்கமாக இருந்த எம்.பி.க்கள் பலரையும் ரகசியமாகக் கண்காணித்து வருகிறது மத்திய அரசு.
நிலைக்குழு கூட்டத்தில் அவருடன் இருந்த தமிழக எம்.பி. ஒருவர் இன்னமும் பயத்துடனே தான் இருக்கிறாராம். அதே போல, துஷ்யந்த்சிங்குக்கு தமிழக எம்.பி. ஒருவர் தனது டெல்லி வீட்டில் விருந்து வைத்திருக்கிறார். இந்த விருந்து நிகழ்ச்சியை அறிந்த மத்திய அரசு, அந்த எம்.பி.க்கு பாதிப்பு இருக்கிறதா என உளவுத்துறை மூலம் ரகசியமாக விசாரித்துள்ளது.
அந்த எம்.பி.யை ரகசியமாகக் கண்காணித்த உளவுத்துறை, கரோனா அறிகுறி அவருக்கு இல்லை என ரிப்போர்ட் தந்திருக்கிறது. இதனையடுத்தே நிம்மதியானதாம் பிரதமர் அலுவலகம் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
இதற்கிடையே, துஷ்யந்த்சிங்கிற்கு டெல்லியில் விருந்தளித்த தமிழக எம்.பி.யும் தனக்கு தொற்று இருக்குமோ எனப் பயந்திருக்கிறார். டெல்லியிலிருந்து சென்னை திரும்புவதற்கு முன்பு, தொற்று ஏற்பட்டுள்ளதா ? என மருத்துவப் பரிசோதனை செய்த நிலையில், எந்தத் தொற்றும் இல்லை எனச் சொல்லப்பட்ட பிறகே அந்த எம்.பி.யும் நிம்மதியடைந்துள்ளார்.