Skip to main content

இரும்பு மனிதரா சர்தார் படேல்?

Published on 31/10/2018 | Edited on 03/11/2018
sardar vallabhai patel


 

இந்தியாவின் வீரப்பெண்மணி இந்திரா துப்பாக்கி ரவைகளால் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட 35 ஆவது நினைவுதினத்தை பின்னுக்குத் தள்ளும்வகையில், அந்த நாளை திசைதிருப்பும் வகையிலேயே படேலின் பிறந்தநாளை முன்னிறுத்துகிறது பாஜக. 
 

மேக் இந்தியா என்ற கோஷத்தை அறிமுகப்படுத்திய மோடி, இந்தியாவை ஒருங்கிணைத்ததாக புகழ்கிற படேலின் சிலையை செய்து ஒருங்கிணைக்க சீனாவின் உதவியை நாட வேண்டியதாயிற்று. 33 மாதங்களில் 182 மீட்டர் உயரத்துக்கு இந்தச் சிலையை நிறுவியிருப்பதாக மோடி மக்களுக்கு வானவேடிக்கை காட்டியிருக்கிறார். 
 

ஆட்சிக்காலம் முடிய சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்தியாவின் நிர்வாகத்துறை, நீதித்துறை என எல்லாவற்றையும் சீர்குலைத்துவிட்டு, அவற்றிலிருந்து மக்கள் கவனத்தை திருப்ப படேல் சிலைத்திறப்பு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.
 

காங்கிரஸ் அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்த, காந்தி கொலையைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடைவிதித்து படேலை இப்போது ஏன் பாஜக தலையில் தூக்கி வைத்து உரிமை கொண்டாடுகிறது? வேறு காரணம் என்னவாக இருக்கமுடியும்? 
 

காங்கிரஸில் இருந்த இந்துத்துவாவை வலியுறுத்திய தலைவர் என்பதைத் தாண்டி என்னவாக இருக்க முடியும்? மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், மக்கள் மத்தியில் சொல்லிக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு தலைவர்கள் இல்லை. அந்தக் குறையைப் போக்கத்தான் காங்கிரஸிடம் கடன்வாங்கிய தலைவரான வல்லபபாய் படேலின் பிறந்தநாளை பாஜக முன்னிலைப்படுத்துகிறது. அரசு அவர்கள் வசம் இருப்பதால் கவனம் அவர் மீது திருப்பப்பட்டுள்ளது. படேலை இரும்பு மனிதர் என்று அடையாளப்படுத்தும் பிரதமர் மோடி, அவருடைய புகழை முந்தைய அரசுகள் மறைத்துவிட்டதாக குறைகூறுவதை வழக்கமாகவே கொண்டிருக்கிறார். அது குஜராத்தில் அவருக்கு ஏதேனும் ஒருவகையில் உதவியாக இருக்கலாம். இந்தியா முழுமைக்கும் எந்தக் காலத்திலும் உதவப் போவதில்லை என்பதை காலம் நிரூபிக்கத்தான் போகிறது.


 

indhiragandhi


 

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று படேலை உருவகப்படுத்துவது சரியா என்ற கேள்விகளுக்கு பலவிதமான விமர்சனங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்றைய இந்தியாவை ஒருங்கிணைக்க படேல் சொந்த மக்கள் எத்தனை ஆயிரம் பேரை ராணுவத்தைப் பயன்படுத்திக் கொன்று குவித்தார் என்பதை மறைத்துவிட்டு அவருக்கு புகழ்மாலை சூட்டுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி அப்போதும் இருந்தது. இப்போதும் இருக்கவே செய்கிறது. 
 

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எப்படி ராணுவத்தைப் பயன்படுத்தி இந்தியாவைக் கைப்பற்றினார்களோ, அதே பாணியில்தானே விடுதலைக்கு பிறகான இந்தியாவின் உள்துறை அமைச்சரான படேலும் இந்தியாவுடன் இணைய மறுத்த காஷ்மீர், ஹைதராபாத் நிஜாம் உள்ளிட்ட பெரிய சமஸ்தானங்களையும், குட்டிக்குட்டி சமஸ்தானங்களையும் ராணுவத்தை பயன்படுத்தி சொந்த மக்களின் ரத்தத்தைக் குடித்து ஒன்றிணைத்தார்?
 

ராணுவம் இருந்தால் அதற்கு தலைமைப் பொறுப்பு கிடைத்தால் ஒருவர் இரும்பு மனிதர் ஆகிவிடுவாரா?
 

இது கேலிக்குரியது இல்லையா? இணைய விரும்பாத மக்களை அச்சுறுத்தி அவர்களைக் கொன்று குவித்து இந்தியாவை ஒருங்கிணைத்துவிட்டேன் என்று மார்தட்டுவது பெருமையா என்றுதான் இப்போதும் ஒருபகுதி மக்கள் கேட்கிறார்கள்.
 

வீரம் அதுவல்ல, அன்பு காட்டி அரவணைப்பதே மிகச்சிறந்த ராஜதந்திரம் என வரலாறு பேசுகிறது. இந்தியரை கொன்று குவித்தாலும் அவர்களுக்கு முந்தைய ஆட்சியாளர்களால்  மறுக்கப்பட்ட அனைத்தையும் கொடுத்து உலகின் பிறபகுதி மக்களுக்கு நிகராக அவர்களையும் மாற்றிய பெருமை மிக்க பிரிட்டிஷாரை கொடுங்கோலர்கள் என்கிறார்கள்.
 

ஆனால், தங்களுடன் இணையாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என்று மிரட்டல் விடுத்து, போதுமான ராணுவ பலம் இல்லாத குட்டி சமஸ்தானத்தை வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் இணைத்ததை வீரம் என்கிறார்கள்.

 

sardar vallabhai patel

அதேசமயம், இந்தியாவின் வீரப்பெண்மணி என்ற புகழுக்கு மிகவும் பொருத்தமான இந்திராவை இவர்கள் மறைக்க முயற்சிக்கிறார்கள். இருந்தாலும் இந்திராவின் புகழை யாரும் மறைத்துவிட முடியாது என்பதே உண்மை.
 

அவருடைய அரசியலில் குறைகள் இருக்கலாம். ஆனால், அவர் இந்தியாவின் முன்னேற்றத்துக்காக மேற்கொண்ட முயற்சிகளை அனைத்தும் சமத்துவம் சார்ந்தவை. அவர் இந்திய மக்களை மிகவும் நேசித்தார் என்பதை மறுக்க முடியாது.
 

பஞ்சாபை தனிநாடாக பிரித்து காலிஸ்தான் உருவாக்கக் கோரிய தீவிரவாதிகளை ஒடுக்க சீக்கியர்களின் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பி தீவிரவாதிகளின் தலைவனை கொன்றார். இதற்கு அடுத்த சில மாதங்களில் 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி சீக்கிய பாதுகாவலர்களால் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
 

அவருடைய இடுப்புப்பகுதி அனைத்தும் சல்லடைக் கண்களாக துளைக்கப்பட்டது. இந்திரா குண்டுதுளைக்காத உடை அணிவார் என்று நினைத்த பாதுகாவலர்கள், அவருடைய மார்புப்பகுதியை தவிர்த்துவிட்டு இடுப்புப்பகுதியை குறிவைத்து சுட்டதாக பின்னர் தெரியவந்தது.
 

இன்னொரு தகவலும் கூறப்பட்டது. ஆம், சீக்கியர்களின் மனம் புண்படும் வகையில் அவர்களுடைய புனிததலமான பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியிருக்கிறீர்கள். எனவே, சீக்கியர்களை உங்கள் பாதுகாப்புக்கு அனுமதிக்க வேண்டாம் என்று இந்திராவிடம் உளவுத்துறை அதிகாரிகள் யோசனை கூறினார்கள். 
 

ஆனால், அந்த யோசனையை இந்திரா ஏற்கவில்லை. எனது நாட்டினரை நானே சந்தேகிப்பதா? தேவையில்லை. அப்படி இந்த உயிர் போனால் அதுவும் எனக்கு பெருமைதான் என்றார் இந்திரா.


 

sardar vallabhai patel


 

ஆனால், அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் இந்தியாவின் முக்கிய பகுதிகளில் சீக்கியர்கள் ஏராளமாக கொல்லப்பட்டனர். இதற்கு இந்திரா எப்படி பொறுப்பாவார்?
 

எனினும், காங்கிரஸ் மீது படிந்த கறையாகவே சீக்கியர் படுகொலைகள் நீடித்தன. ஆனால், நடந்த அந்த சம்பவத்துக்காக காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக மன்னிப்புக் கோரியது. பிராயச்சித்தமாக மன்மோகன் சிங் என்ற சீக்கியரை பிரதமராகவே ஆக்கியது காங்கிரஸ். மன்னிப்புக் கேட்பவனே மிகப்பெரிய மனிதன் என்பார்கள். அன்பால் அரவணைப்பதே வீரம் என்று ஆபத்தையும் பொருட்படுத்தாமல் சீக்கிய பாதுகாவலரை அரவணைத்து உயிர்துறந்தவர் இந்திரா காந்தி.
 

ராணுவத்தைப் பயன்படுத்தி இந்தியாவை ஒருங்கிணைத்தார் என்பதைக் காட்டிலும், அன்பால் ஒருங்கிணைத்தார் என்றிருந்தால் படேலை பாராட்டலாம் என்பதே பெரும்பாலோர் கருத்து.