அளவுக்கு அதிகமாக ஆசைப்படுற ஆம்பளை மட்டுமல்ல பெண்களும் உருப்பட்டதா சரித்திரம் இல்லை என்பதை சிலருடைய சரித்திரம் நிரூபிக்கிறது. இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பவர் மலேசிய முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோர்.
அர்ஜென்டினா நாட்டின் ஜனாதிபதியாக இருந்த இஸபெல் பெரோன், பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்த மார்கோஸின் மனைவி இமெல்டா மார்கோஸ், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆகியோரின் ஆடம்பர வாழ்க்கைதான் இதுவரை சாதனையாக இருந்தது.
மலேசியாவின் ரோஸ்மா சாதாரண ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தவர். அப்துல் அஜிஸ் நோங் சிக் என்பவரை திருமணம் செய்து, இரு குழந்தைகளைப் பெற்றவர். 1987-ஆம் ஆண்டு, தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு மலேசியாவின் கலாச்சார அமைச்சரான நஜிப் ரஸாக்கை திருமணம் செய்தார்.
அப்போது தொடங்கிய ரோஸ்மாவின் ஆடம்பரவாழ்க்கை, 2009-ஆம் ஆண்டு நஜிப் மலேசிய பிரதமராக பொறுப்பேற்ற பிறகு எல்லையைக் கடந்தது. மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலையே இல்லாமல் கணவருடைய அதிகாரத்தை பயன்படுத்தி வெரைட்டியான விலை மதிப்புள்ள நகைகளை வாங்கிக் குவித்தார்.
22 ஆண்டுகள் பிரதமராக இருந்த மகாதீர் முகமதுவின் மனைவியை எளிமையின் சின்னமாக கூறுகிறார்கள். ஆனால், ரோஸ்மா உலகின் மிக முக்கியமான நகைக்கடைகளை தேடித்தேடி போய் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் விதவிதமான நகைகளை வாங்கிக் குவித்திருக்கிறார். அவருடைய ஆடம்பரக் கூத்துகளை பிரதமர் நஜிப் கண்டுகொள்ளவே இல்லை.
மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹாட் என்ற முதலீட்டு நிறுவனத்தை அரசு சார்பில் தொடங்கிய நஜிப், ஆறு ஆண்டுகளில் இந்த நிறுவனத்திலிருந்து மக்கள் பணம் சுமார் 450 கோடி ரூபாயை தனது சொந்தக் கணக்குகளுக்கு மாற்றியிருப்பதாக வால்ஸ்ட்ரீட் பேப்பர் அம்பலப்படுத்தியது. அப்போது தொடங்கியது நஜிபின் வீழ்ச்சி.
"ஒரு தலைவரின் மனைவி என்ற வகையில் நான் என்னை அலங்காரப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. எனது தோற்றத்தை பராமரிக்க வேண்டியிருக்கிறது. நான் என்னை அலங்காரம் செய்துகொள்ளத் தவறினால் அதுவும் விமர்சிக்கப்படும்'’ என்று தனது ஆடம்பர வாழ்க்கைக்கு ரோஸ்மா விளக்கம் சொல்வது வழக்கம்.
கணவன் மனைவியின் கூத்து போதாது என்று ரோஸ்மாவின் முதல் கணவருக்கு பிறந்த மகனும் தனது பங்கிற்கு கொள்ளையடித்திருக்கிறார். இதையடுத்தே, இவர்களுடைய அட்டூழியத்தை கட்டுப்படுத்த முன்னாள் துணை பிரதமர் அன்வர் தலைமையிலான கட்சியும், சில எதிர்க்கட்சிகளும் இணைந்து மலேசிய பொதுத்தேர்தலை சந்திக்க திட்டமிட்டன. மே 9 ஆம் தேதி நடைபெற்ற மலேசிய தேர்தலில் நஜிப் படுதோல்வி அடைந்தார்.
தோல்வியைத் தொடர்ந்து கணவனும் மனைவியும் வெளிநாடு தப்பத் திட்டமிட்டனர். ஆனால், அரசு அவர்களை வீட்டுச் சிறையில் வைத்தது. அதன்பிறகு அவர்களுடைய வீடுகள் சோதனையிடப்பட்டன. இந்தச் சோதனையில்தான் பணமாகவும், தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட விலையுயர்ந்த நகைகளாகவும் குவிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
72 சூட்கேஸ்களில் இருந்த இந்தக் குவியலை போலீஸார் பறிமுதல் செய்தனர். லண்டன், ஹவாய், நியூயார்க், ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ள புகழ்பெற்ற நகைக்கடைகளில் இவை வாங்கப்பட்டிருந்தன. இந்த நகைகளின் மதிப்பு சுமார் 40 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஆகும்.
2008 முதல் 2015 ஆம் ஆண்டுவரை இவர் அலங்காரப் பொருட்களுக்கு மட்டும் 54 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறார். 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட முதுமையை தடுக்கும் மாத்திரைகளை வாங்கியிருக்கிறார். உருக்குப் பெண்மணி என்று கூறிக்கொள்ளும் இவர், 680 கோடி ரூபாய்க்கு ஆடம்பர செருப்புகளையும், உடைகளையும் வாங்கியிருக்கிறார்.
விலையுயர்ந்த ஆடம்பரமான முதலைத் தோலில் வைரம், தங்கம் கலந்து செய்யப்பட்ட 274 ஹேண்ட்பேக்குகள் கைப்பற்றப்பட்டன. இவை 10 லட்சம் ரூபாய் முதல் 81 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ளவை. தனது வருமானத்துக்கு ரோஸ்மா தனது சுயசரிதையில் கூறியுள்ள சோர்ஸ் என்ன தெரியுமா?
"எனது பாடல்கள் அடங்கிய ஆல்பங்களை தயாரித்து வெளியிட்டேன். அதில் கிடைத்த வருமானத்தில்தான் எனக்குத் தேவையான நகைகளையும் உடைகளையும் வாங்கினேன்' என்கிறார்.’’
இது உண்மையா என்றால் உண்மைதான். ஆனால், இவர் வெளியிட்ட இசை ஆல்பத்தை வாங்கியவர்கள் அனைவருமே, மலேசிய அமைச்சரவையில் இவருடைய பாடலுக்கு ரசிகர்களாக இருந்த அமைச்சர்கள்தானாம்!