Skip to main content

பாக்கியம் ராமசாமி மறைவு!

Published on 08/12/2017 | Edited on 08/12/2017
பாக்கியம் ராமசாமி மறைவு!
இறக்கும் நாளிலும் நகைச்சுவை பதிவு!

பாக்கியம் ராமசாமி பிரபல எழுத்தாளர் ஆவார். தனது 87-வது வயதில் நேற்று இரவு காலமானார். அவரது இயற்பெயர் ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன். ஜ.ரா.சு. என்றழைக்கப்படும்  ஜ.ரா. சுந்தரேசன், தன்னுடைய தாய் மற்றும் தந்தையின் பெயரை இணைத்து பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் நகைச்சுவைக் கதைகள் எழுதி வந்தார். வாசகர்கள் மத்தியில் பிரபலமான அப்புசாமி – சீதாபாட்டி கேரக்டர்கள் இவர் உருவாக்கியவை.



இறப்பதற்கு ஏழு மணி நேரத்துக்கு முன், தனது முகநூல் பக்கத்தில், பாக்கியம் ராமசாமி எழுதிய கடைசி பதிவு இதோ -  

பொழுது போக சந்தா கட்டுங்கள்!
- பாக்கியம் ராமசாமி

பொழுது போகவில்லையென்றால் ஏதாவது ஒரு பத்திரிகைக்கு ஒரு ஆறு மாத சந்தா கட்ட நினைத்தால் போதும்.

அந்தப் பத்திரிகையின் ஸ்திரத் தன்மை பற்றி நமக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்பதற்கு நாலு நாள். மேற்படி பத்திரிகையை யார் வாங்குகிறார்கள் என்று தேடல் நாலு நாள். பத்திரிகையைக் கண்டுபிடித்ததும் சந்தா விவரம் அதில் எங்காவது போட்டிருக்கிறதா என்பதை தேடுவதற்கு நாலு நாள்.

சந்தா விவரம் எல்லா இதழ்களிலும் போடப்படமாட்டாது, பிரதி மாசம் முதல் வாரம் பிரசுரிக்கப்படும் இதழில் மட்டுமே காணப்படும் என்ற விவரம் தெரியவரும். அடுத்த சில நாட்கள் பழைய பத்திரிகைக் கடைகளுக்குச் சென்று மேற்படி பத்திரிகையின் மாதமுதல் இதழ் கிடைக்குமா என்று தேடச் சரியாக இருக்கும். பத்து நாட்கள் கழித்து டெலிபோன் மூலம் அந்தப் பத்திரிகைக்கே போன் செய்து அவர்கள் தந்த இலாகா நம்பர்களுக்கெல்லாம் தொடர்புகொண்டு குறிப்பிட்ட செக்ஷனின் பொறுப்பாளருடன் பேச இயலாமல் (அவர் பெரும்பாலும் காஃபி சாப்பிட போயிருப்பார், அல்லது லீவு போட்டிருப்பார்.) பொறுமை காத்தல்.

மேலும் பல நாள் கழித்து அவர் நமக்குக் கிடைப்பார். வருட சந்தா எவ்வளவு? ஆறு மாத சந்தா எவ்வளவு? மூன்று மாத சந்தா உண்டா? சந்தாவை மணி ஆர்டரில் அனுப்பலாமா? என்பன போன்ற சந்தேகங்களை அவரிடம் கேட்டு விடையை தெரிந்துகொள்ள இரண்டு மூன்று நாளாகும். ஏனெனில் அவர் பேசும்போதே லயன் கட்டாகிவிடும் அல்லது நமது பேச்சு வேறு இலாகாவுக்குப் போய் அங்குள்ளவர்களை குழப்பி அடிக்கும். நாம் திரும்பி வருவதற்குள் சந்தா இலாகாக்காரர் காப்பி சாப்பிட போய்விடுவார் அல்லது ஆபீஸ் முடிந்து விடும். மறுநாள் லீவாயிருக்கும். சில சமயம் அவரது லீவும் விழாக்களின் லீவுமாகத் தொடர் லீவாக அமைந்துவிடும்.

புதிய திங்கட் கிழமையில் சந்தாவுக்கான தொகையை ஒரு செக்கில் எழுதி அனுப்பப்படுகிறது. செக்கு கிடைத்ததா என்று அறியும் முயற்சியில் பல நாட்கள் செலவாகும்.

அந்த செக்கை உண்மையில் அந்த ஆபீசுக்கு அனுப்பியிருக்கக் கூடாது. கதை கட்டுரை போன்றவை மட்டுமே அந்த ஆபீசுக்கு அனுப்பவேண்டும். மற்றவற்றை வேறு இடத்துக்குத்தான் அனுப்பவேண்டும் என்ற உண்மை தெரியவருகிறது. அவர்களே அந்தக் காரியத்தைச் செய்யலாமே என்றால் அப்படியெல்லாம் வழக்கமில்லை என்பார்கள்.

ஆகவே மறுபடியும் அந்த ஆபீசுக்கு நேரில் போய் நமது செக்கை திரும்பப் பெற்று வர இரண்டு மூன்று நாள் ஆகிவிடும். இப்போது மனைவி ஒரு ஜோதிடப் பத்திரிகை காட்டுகிறாள். அதில் சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பொருள் நஷ்டமும், மன உளைச்சலும் இந்த வாரம் சற்றுக் கடுமையாக இருக்கும். பரிகாரமாக காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள காட்டாமணத்தூரிலுள்ள கலியமூர்த்தி சன்னதிக்குச் சென்று நெய் விளக்கு 24 நாள் ஏற்றி வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆகவே சந்தா கட்டும் விஷயம் 24 நாட்கள் தள்ளிப் போடப்படுகிறது. இருபத்தைந்தாவது நாள் சந்தா கட்டுதல் பேச்சு துளிர்விடுகிறது. இந்தத் தடவை மேற்படி பத்திரிகை ஆபீசுக்குப் போனபோது அது வேறு எங்கோ மாற்றப்பட்டுவிட்டது என்று தெரியவந்தது. கேஷாக பணம் எடுத்துக்கொண்டு நேரில் சென்று கட்டியே கட்டியாகிவிட்டது. முன்பே கட்டாதது தவறு என்று மனைவி கோபப்பட்டு, சந்தா சண்டை, விவாகரத்து அளவுக்கு தகராறு முற்றி சந்தாவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.



ஆனால், விஷயத்தை அத்தோடு முடித்துக் கொண்டால் நம்ம பொழுது எப்படிப் போகும்? ஆகவே மேற்படி பத்திரிகையை சந்தா செலுத்தாமல் வரவழைப்பது எப்படி என்று பல நாட்கள் யோசிக்கவேண்டும். வீட்டுக்குத் தினசரி செய்தித் தாளைப் போடுபவரிடம் சொன்னால் சலாம் போட்டுக் கொண்டு வீட்டில் கொண்டு வந்து சப்ளை செய்வானே என்று மனைவி கூறுவாள். எந்தப் பேப்பர்காரன் நாம் விரும்பும் அந்தக் குறிப்பிட்ட பத்திரிகையைப் போடக்கூடியவன் என்பதை அறிய முயற்சி செய்வோம்.

அவனைக் கண்டுபிடிக்க ஒரு பத்து நாள் செலவிடலாம். நமது குடியிருப்பில் நூற்று பன்னிரண்டு வீடு இருக்குமாதலால், பலவித பத்திரிகைகள் போட, பலவித குழந்தைகள், பையன்கள், வாலிபர்கள், கிழவர்கள் வருவார்கள். குறிப்பிட்ட பத்திரிகை சப்ளை செய்வதாக ஒருத்தர் ஒப்புக் கொண்டாயிற்று. ஆனால் அவர் அடுத்த ஒரு வாரம் ஆளே காணோம்.

அந்த ஆள் யார், பெயர் என்ன, முதலாளியிடம் புகார் கொடுக்க வேண்டுமென்று கொஞ்ச நாள் தள்ளலாம்.

அவனே கிடைக்காவிட்டாலும் அவன் மாதிரி யாராவது தென்பட்டாலும் அவனை ஓடி ஓடிப் போய்க் கூப்பிட்டு நாம் விரும்பிய பத்திரிகையின் பெயர் அங்க அடையாளம் எல்லாவற்றையும் சொன்னால் அந்தப் பையன் ஒரு மாதிரி சிரித்துக்கொண்டு "அது நான் இல்லைங்க" என்று நழுவி விடுவான்.

இப்படியாக நாம் விரும்பிய பத்திரிகைக்கு சந்தா கட்ட முடியாமலே போனாலும் நமது பொழுது அருமையாகக் கழிய சந்தா கட்டும் காரியம் சகாயம் செய்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.



எழுத்துக்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை பாக்கியம் ராமசாமியும் உறுதிபடுத்திவிட்டு மறைந்திருக்கிறார். இறக்கும் வரையிலும் எழுத்துப் பணியில் ஈடுபட்ட அன்னாரது மறைவு, எழுத்துலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

- சி.என்.இராமகிருஷ்ணன் 

சார்ந்த செய்திகள்