ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து அவரது தீவிர, உண்மையான ரசிகர்கள் மனநிலை எப்படி உள்ளது? அவர்களது எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து அறிய சிலரை சந்தித்தோம்.
அதில் ஒருவர் பெரம்பலூரைச் சேர்ந்த கார்த்திகேயன். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், தூய்மையான ஆட்சி நடத்த வேண்டும், அவர் நிச்சயம் வருவார் என்று அவரோடு இணைந்து பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்காக திருமணமே செய்து கொள்ளாமல் ஆன்மிகத்திலும் பொதுப் பணிகளிலும் ஈடுபட்டு வருபவர், பெரம்பலூர் நகரில் வசிக்கும் தீவிர ரசிகரான கார்த்திகேயன். 50 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார், ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ரஜினி மீதும் அவரது நடிப்பின் மீதும் அதிதீவிர ரசிகர் அபிமானியான இவர், ரஜினியைப் போலவே ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். ரஜினியைப் போலவே அடிக்கடி இமயமலை, ரிஷிகேஷ், கேதார்நாத் உட்பட பல்வேறு இடங்களுக்கும் சென்று தரிசனம் செய்பவர். அங்கு செல்லும்போது ரஜினியை இவர் பல முறை சந்தித்துள்ளார். ஆனால் அவரிடம் சென்று பேசியதில்லை. தூரத்தில் இருந்து அவரை ரசிப்பதோடு சரி.
ரஜினி ரசிகராக இருந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். தற்போது ரஜினி ரசிகர் மன்றத்தில் விவசாய அணியின் மாவட்ட செயலாளராக உள்ளார் கார்த்திகேயன்.
ரஜினி அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்துள்ளது குறித்து அவரிடம் கேட்டோம். அதோடு ஜெயலலிதா, எம்ஜிஆர், கலைஞர் மூவருக்கும் தமிழகத்தில் மக்களிடம் தனிப்பட்ட செல்வாக்கு இருந்தது, அந்த முகத்திற்காக வாக்குகள் விழுந்தது. அவர்கள் வெற்றி பெற்று முதலமைச்சராக அமர்ந்தார்கள். தேர்தலில் வெற்றி பெற்றால் நானே முதல்வர் என்று மூவருமே வெளிப்படையாக மக்களிடம் கூறி வெற்றி பெற்று முதல்வர் ஆனார்கள். ஆனால் ரஜினி ஆட்சியை பிடித்தால் வேறு ஒருவரை முதல்வராக உட்கார வைக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது எப்படி சாத்தியமாகும் என்றும் கேட்டோம்.
இதற்கு பதில் அளித்த கார்த்திகேயன், ''நான் தீவிர ரஜினி ரசிகனாக இருந்த காலத்திலிருந்தே அவர் அரசியலுக்கு வருவார், கட்சி ஆரம்பிப்பார். தமிழக முதல்-அமைச்சர் ஆவார் என்று கூறியிருந்தேன். அப்போதெல்லாம் பல அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் என்னை கேலியும் கிண்டலும் செய்தனர்.
ஆனால் என் உள்மனசாட்சி அவர் நிச்சயமாக அரசியலுக்கு வருவார் என்று கூறிக்கொண்டே இருந்தது. அதன்படி தற்போது வெளிப்படையாக அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். நிச்சயமாக அவர் ஒருமுறை மட்டுமல்ல, மூன்று முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து முதலமைச்சராகி நல்லாட்சி நடத்துவார். அவர் மற்றவர்களை முதல்வராக்க வேண்டும் என்று கூறுவது தனக்கு ஆசையில்லை என்று வெளிப்படுத்துவதற்காக தான். ஆனால் சூழ்நிலை கருதி அவரே முதல்வராக ஆட்சியில் அமர்வார். ஆன்மீக அரசியல் என்று அவர் கூறுவதற்கு காரணம் பொதுவாக ஆன்மீகம் இறைபக்தி உள்ளவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் தூய்மையாகவும் இருப்பார்கள். இருக்க வேண்டும். அதன்படி இருப்பவர். நடந்து கொள்பவர்.
ரஜினி நேர்மையின் இலக்கணம். உழைப்பிற்கு எடுத்துக்காட்டு. இன்றைக்கு அரசியல் பெரும்பாலான தலைவர்களின் குடும்பத்தினர் பிள்ளைகள் இறைவனை தேடி கோயில் கோயிலாக ஓடுகிறார்கள். வெளிப்படையாகவே கோயிலை நாடிச் செல்கிறார்கள்.
திரையில் நடிப்பது என்பது வேறு. ஆனால் மக்களிடம் நடிக்கக்கூடாது என்கிறார் ரஜினி. அப்படிப்பட்டவரை தமிழக மக்கள் தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்வார்கள். அதன் மூலம் தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான வெளிப்படை தன்மையான ஆட்சியாக நடத்துவார். சில நாட்களுக்கு முன்பு கூட அவர் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தினார். அதில் அவர்களிடம் ஆலோசனை கேட்டார். அவரது கருத்தையும் அப்போது வெளிப்படுத்தினார்.
உடனே பலர் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கமாட்டார் என்று பேச ஆரம்பித்தனர். இதைவிட கொடுமை ரசிகர் மன்ற பொறுப்பில் உள்ளவர்கள் கூட ரஜினி அரசியல் கட்சி துவக்க மாட்டார் என்று வெளிப்படையாக பேச ஆரம்பித்தனர். அதற்கு உதாரணமாக வரும் 12. 12. 2020 அன்று ரஜினி அவர்களே பிறந்தநாள் வருகிறது அதற்காக பெரம்பலூரில் ஒரு கலந்தாய்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள சிலரே வந்தனர். ஆனால் அவர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்ததும் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஒன்று கூடி வெடி வெடித்துக் கொண்டாடினார்கள்.
தவறான பல நபர்கள் மன்ற பொறுப்பில் உள்ளனர். அப்படிப்பட்டவர்கள் மற்ற கட்சிகளில் உள்ளவர்களை போல அரசியலுக்கு செல்வது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலையில் ஊறிப் போய் உள்ளனர். ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதன் மூலம் ஆதாயம் பெறலாம் என்ற நோக்கத்தில் உள்ளனர். இது பெரும்பாலான மாவட்டத்தில் உள்ளது. இதை எல்லாம் களையெடுத்து உண்மையான நேர்மையான மன்ற பொறுப்பாளர்கள் அறிவிக்க போவதாகவும் மன்ற பொறுப்புகளில் பெரியளவில் மாற்றம் செய்யப்போவதாக அவரே கூறியுள்ளார். அது நிச்சயம் நடக்கும். போலிகளை அவர் நிச்சயம் களை எடுப்பார்.
ரஜினிக்கு வயதாகிவிட்டது, ரஜினி ரசிகர்களுக்கு வயது கடந்துவிட்டது, அரசியலில் வெற்றி பெற முடியாது என்று பலர் பலவிதமாக பேசுகிறார்கள். அவை அனைத்தையும் ரஜினி மாற்றிக் காட்டப் போகிறார். தன் ரசிகர் மன்ற பொறுப்பாளர்களை மட்டும் நம்பி அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை. அவரது தீவிர ரசிகர்கள் அவர்களது ஒவ்வொருவர் மனதிலும் ரஜினி நீங்காத இடம் பெற்றுள்ளார். அப்படிப்பட்ட ரசிகர்கள் ரசிகைகள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பல லட்சக்கணக்கான பேர் உள்ளனர். அவர்கள் வெளிப்படையாக ரஜினி மீது உள்ள அபிமானத்தை காட்டிக் கொள்ளவில்லை. அப்படிப்பட்டவர்கள் ரஜினியை நிச்சயம் அரசியலில் ஆதரிப்பார்கள். ஆதரிக்கப் போகிறார்கள்.
ரஜினி கூறியது போன்று அதிசயம் நடக்கும். இப்போது இதை செய்யவில்லை என்றால் எப்போது தான் செய்ய முடியும் என்ற நிலைப்பாட்டை ரஜினி எடுத்துள்ளார். பலர் பல விதமாக பேசலாம் பல அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை விமர்சனம் செய்யலாம். அவற்றையெல்லாம் முறியடித்து அவர் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து முதல்வராக அமர்வது உறுதி. அவருக்கு மக்களும் இறைவனும் துணையாக உள்ளனர் என்று அதிரடியாக பேசி அசர வைத்துள்ளார் கார்த்திகேயன்.