2012ஆம் ஆண்டு ஜனவரி 9-ந்தேதி வெளியான நக்கீரன் இதழில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் உணவுப் பழக்கம் குறித்து ஒரு செய்தி வெளியானது. அதையடுத்து, ஜெ.வின் தூண்டுதலின் பேரில் நக்கீரன் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள் ஏராளம். அ.தி.மு.க.வினரால் இரண்டு நாட்கள் நக்கீரன் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. நக்கீரன் ஊழியர்கள் உள்ளே இருக்கும்போது வெளியிலிருந்து தீ வைக்கப்பட்டது. அமைச்சர்கள் முன்னிலையில், எம்.எல்.ஏ.வே களமிறங்கி இத்தகைய வேலையை செய்தார். ஒரு எம்.எல்.ஏ. அலுவலக வாசல் கதவைப் பூட்டினார்.
நக்கீரன் அலுவலகத்தின் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து காவல்நிலையங்களிலும் ஆசிரியர் மீது சுமார் 261 எஃப்.ஐ.ஆர்.கள் போடப்பட்டு, நக்கீரன் அலுவலகம், நக்கீரன் ஆசிரியர் இல்லம் ஆகியவற்றில் சோதனை என்ற பெயரில் காவல்துறை அத்துமீறல் நடத்தி ஊழியர்களையும், குடும்பத்தினரையும் மிரட்டியது. செஷன்ஸ் நீதி மன்றத்தில் அரசு சார்பாக அவ தூறு வழக்கு தாக்கல் செய்யப்பட் டது.
தனது தனிப் பட்ட வாழ்க்கையை நக்கீரன் எழுதி விட்டதாகக் கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் ஜெ. தமிழகம் முழுவதும் நக்கீரன் இதழ்களை ஏஜெண்டுகளிடம் இருந்து பறித்துச் சென்று எரித்தனர். ஏஜெண்டுகள் மிரட்டப்பட்டனர். தமிழக முதல்வரை இழிவுபடுத்தி சட்டசபைக்கு அவமானம் ஏற்படுத்துவதாகக் கூறிய சபாநாயகர், இது தொடர்பான உரிமை மீறல் பிரச்சினையில் சட்டசபையில் ஆஜராகுமாறு ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கைகள் மேற் கொண்டார். இவ்வாறு ஒரு செய்திக்காக 8 வகையான நடவடிக்கைகள் மேற்கொண்டது ஜெ. தலைமையிலான அ.தி.மு.க. அரசு.
அத்தனை அடக்குமுறைகளையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் எதிர்த்து கடந்த 8 வருடங்களாக நக்கீரன் சட்டத்தின் துணையுடன் போராடி வருகிறது.
இந்நிலையில், தந்தி டி.வி.யில் ஒளிபரப்பான ""ஜெ. ஜெயலலிதா எனும் நான்'' என்ற தொடரில் பேசியுள்ளார் அ.ம.மு.க. துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அவர் அளித்த பேட்டியில், ""எங்கேயாவது காரில் போகும் போது ரோட்டுக் கடையில மசால் வடை போடும் போது அதை (ஜெ.) வாங்க சொல்லுவாங்க. பாய்லர் டீ அவுங் களுக்கு பிடிக்கும். இதெல்லாம் 88 - 89-ல்.
எங்க இளவரசி மாமி சமைத்தால் அவர்களுக்கு பிடிக்கும். தஞ்சாவூர் சமையலை சமைக்க சொல்லி ஞாயிற்றுக்கிழமை சாப்பிடுவாங்க. நான் வெஜிடேரியனும் (அசைவம்) சாப்பிடுவாங்க. வெஜிடேரியனும் சாப்பிடுவாங்க. சில நாள் சனிக்கிழமை, வியாழக்கிழமைன்னு நாங்க விரதம் இருப்போம். அதுக்கு அவங்க. "நானே அசைவம் சாப்புடுறேன்... சாப்பிடுப்பா'ன்னு சொல்லுவாங்க...
"2014 சிறைக்குச் சென்ற பிறகு சுத்தமாக அசைவத்தை விட்டுட்டாங்க. அதுக்கப்புறம் வெஜிடேரியனா மாறிட்டாங்க. எங்க சித்தியும் (சசிகலா) வெஜிடேரியனா மாறிட்டாங்க'’’ எனத் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அசைவம் சாப்பிடுவார் என்று அவரது உணவுப் பழக்கம் குறித்து இப்போது தினகரன் வெளிப்படையாகப் பேசி யுள்ள நிலையில், அதே உணவுப் பழக்கம் குறித்து அன்று எழுதியதற்காகத்தான் நக்கீரன் மீது கொடூரமான 8 வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இன்று ஜெ.வின் உணவுப்பழக்கம் எத்தகையது என்பது தினகரன் வாயால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுபோலவே, ‘"கவர்னர் கறார்-ராஜ்பவனில் சைவப் பூனைகள்'’ என்ற தலைப்பில், பன்வாரிலால் புரோகித் சைவம் என்பதால், ராஜ்பவனில் அசைவ உணவு சமைக்கப்படுவதில்லை என்ற செய்தியையும் நக்கீரன் வெளியிட்டிருந்தது. தற்போது ஆளுநரே, "நான் சைவ உணவு உண்பதால் ராஜ்பவனில் அசைவம் இல்லாத நிலையை ஏற்படுத்திவிட்டேன்' என வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அதிகார அத்துமீறல்கள்-சட்டத்தின் பாய்ச்சல்கள்-தாக்குதல்கள்-சிறைவாசம்-உயிரிழப்பு எனக் கடும் சவால்களுக்கிடையே மக்களிடம் உண்மையைக் கொண்டு சேர்க்கும் நக்கீரனின் புலனாய்வுகள் பொய்ப்பதில்லை.