'துப்பறிவாளன் 2' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்தது. அதற்குப் பிறகு விஷால்- மிஷ்கின் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து மிஷ்கின் இயக்குனர் பொறுப்பிலிருந்து விலகினார். பின்னர் அந்த படத்தை தானே இயக்குவதாக விஷால் அறிவித்தார். அதுமட்டும் இல்லாமல் மிஷ்கின் பெயர் இல்லாமலேயே படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை விஷால் வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதற்கு முன்பு மிஷ்கினை மறைமுகமாகச் சாடி விஷால் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் "கனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் செலவழித்து, அதற்கும் மேலாக பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தை தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் பணத்தை 13 கோடி ரூபாய்க்கு பக்கம் செலவழித்த பின்னர், படத்தை விட்டு ஒரு இயக்குனர் விலகுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என குறிப்பிட்டிருந்தார். இதே போல் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்துக்கு இயக்குநர் மிஷ்கின் விதித்த 15 நிபந்தனைகள் கொண்ட கடிதமும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் 'கண்ணாமூச்சி' வெப்சீரிஸ் அறிமுக விழாவில் கலந்துக்கொண்ட பேசிய இயக்குனர் மிஷ்கின், "துப்பறிவாளன் 2 படத்தை சகோதரன் என்று நினைப்பவனுக்காக எழுதினேன். அந்த சகோதரனை ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் மோசமாக பேசும் பொழுதும், மோசமாக பார்க்கும் பொழுதும், அவனை என் தோளில் போட்டுக்கொண்டு சகோதரனாக பாவித்தேன். நான் என் நிஜ சகோதரனிடம் கூட அவ்வளவு அன்பு செலுத்தவில்லை. அவனிடம் அவ்வளவு அன்பு செலுத்தினேன். துப்பறிவாளன் வெற்றியை அடுத்து ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு கதை எழுதச் சொன்னான், எழுதினேன். உனக்கு நிறைய கடன் இருக்கு, தமிழில் மட்டுமில்லாமல் இந்திய அளவிலான மொழிகளில் கதை எழுதலாம் என்று சொல்லி கோகினூர் வைரத்தை வைத்து கதை எழுதினேன்.அத்த கதை ஆந்திரா, கர்நாடகா, வட இந்தியா என பல மாநிலங்களுக்கு பொறுத்தமாக இருக்கும். அந்த கதைக்கு என்று ஒரு வரலாறு உண்டு. அதை நீ பல மாநிலங்களில் டப்பிங் செய்யலாம் எனச் சொன்னேன். அந்தக் கதையை எழுதி முடித்தவுடன், அதை பாபி என்ற தயாரிப்பாளர் கேட்டுவிட்டு கதை பிடித்துப் போக எனக்கு அட்வான்ஸ் தொகை வேறு கொடுத்தார்.
அதற்குப் பிறகு அந்தக் கதையைக் கேட்டு விஷாலும் என்னை கட்டிப்பிடித்து அழுதான். இந்தக் கதை எனக்கு போதும். இதை வைத்து என் அனைத்து கடனையும் அடைத்துவிடுவேன் என்று கூறினான். மூன்று நாளில் வந்து அந்த பாபி என்ற தயாரிப்பாளர் வேண்டாம், நானே தயாரிக்கிறேன் என்று சொன்னான். அப்போது ஆரம்பித்தது என் தலைவலி. நான் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுத மட்டும் 35 லட்சம் ரூபாய் நான் செலவு செய்ததாக விஷால் கூறியுள்ளார். நான் 35 லட்ச ரூபாய் செலவு பண்ணியதை ஆதாரத்துடன் நிரூபக்க வேண்டும். நான் ஒரு தயாரிப்பாளர்களின் இயக்குனர். ஒரு கதை எழுதுவதற்கு 35 லட்ச ரூபாய் செலவு செய்கிறான் என்றால், அவன் படம் இயக்குவதற்கே தகுதியற்றவன் என்று நான் சொல்வேன். விஷால் சொன்னவுடன் எழுதிய பத்தரிகையாளர்களாகிய நீங்கள் அதற்கான ஆதாரத்தை விஷாலிடம் கேட்க வேண்டும்.
என் தம்பி என்று நினைத்த அவர் என் தாயை கேவலமாக திட்டியிருக்கிறார். அவர் பேசியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. நான் என்ஓசி கொடுக்காமல் தயாரிப்பாளர் சங்கத்துக்கோ, இயக்குனர் சங்கத்திற்கோ சென்றிருந்தால் இன்று படத்தின் ஃபஸ்ட் லுக்போஸ்டர் ஒட்டியிருக்க முடியுமா?. உன் வாழ்க்கை சொல்லும், உன் தாய், தந்தை, தங்கை சொல்வார்கள் நான் எப்படி பழகியிருக்கிறேன் என்று. ரமணாவும், நந்தாவும் உன்னை ரோட்டில் கொண்டு இறக்கி விடுவார்கள் என்று நான் சொன்னது சத்திய வாக்காச்சு, இந்த படம் நின்றதற்கு காரணமும் அதுதான். இனி விடமாட்டேன். தமிழ்நாட்டில் நான் ஒருத்தர்தான் அவனை பத்திரமாக பார்த்துக் கொண்டேன். இனி தமிழ்நாட்டை அவனிடமிருந்து நான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தம்பி விஷால் உன்னுடைய பூஜா வேலையை எல்லாம் இங்கு காட்டாதே. உனக்கு இருக்கு ஆப்பு. இது தான் தொடக்கம். இன்று முதல் நீ தூங்கவே மாட்டாய். உன் தரப்பில் தர்மம் இருந்தால் வா குருஷேத்ரப் போருக்கு. வா போரிடலாம்" என்று சவால் விடுத்தார்.