மாட்டை வைத்துக்கொள்ளுங்கள்...
நாட்டைக் கொடுங்கள்!
அதிகாரத்தை நெருங்கிய ஜிக்னேஷ் !

குஜராத் தேர்தல் பரபரப்பு நேற்று (19-டிசம்பர் -17) முடிந்தது. இதில் பிஜேபி 99, காங்கிரஸ் 77, நேஷனல் காங்கிரஸ் 1, மற்ற கட்சிகள் 5 தொகுதிகளையும் கைப்பற்றினர். குஜராத்தில் வணிகர்களின் வாக்கு வங்கி அதிகமிருக்கும் நிலையில், பணமதிப்பிழப்பு, ஜி எஸ் டி போன்ற இரண்டு பெரிய நடவடிக்கைகளும் பாஜகவிற்கு பெரிய தோல்வியை கொடுக்கும் என்பதை தாண்டி, பாஜக பெற்ற வெற்றி, பிஜேபியின் கோட்டையாக இருந்த குஜராத்தில் காங்கிரஸ் அடைந்திருக்கும் கணிசமான முன்னேற்றம், என்று பல பெரிய பேச்சுகளைத் தாண்டி கவனிக்கப்பட்ட இன்னொரு பெயர் ஜிக்னேஷ். சுயேட்சை வேட்பாளரான ஜிக்னேஷ் மேவானி என்ற 35 வயது இளைஞரும் வெற்றிபெற்றார் ( 35 வயது என்பது அரசியலுக்கு இளைஞர் தானே?) . இவர் நின்ற தொகுதியான வடகாமில் இவரை ஆதரித்து காங்கிரஸ் தன் வேட்பாளரை நிறுத்தவில்லை. மேவானி அரசியல் செல்வாக்குள்ள பெரும்பான்மை சமூகத்தையோ, பெரிய குடும்பத்தையோ சேர்ந்தவர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜிக்னேஷ் மேவானி, டிசம்பர் 11 1982 ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் பிறந்தார் . 2003ஆம் ஆண்டு, இளங்கலை ஆங்கிலம் பயின்று, பின்னர் பத்திரிகை மற்றும் ஊடகவியல் கல்வி பயின்றுள்ளார். 2013 ஆண்டு வழக்கறிஞராக பட்டம் பெற்றார். 2004 ஆண்டில் இருந்து 2007 வரை பத்திரிகையாளராகவும் செயல்பட்டுள்ளார். கல்வி, வேலை, தலித்துகளுக்கு ஆதரவாக வாதாடுதல் என்று இருந்த இவரின் பயணம் 2016 ஆண்டு தான் முழுமையான அரசியல் பயணமாக தொடங்கியது. "ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ச்" என்ற தலித் மக்கள் அமைப்பின் தலைவர் ஆனார்.பசு பாதுகாவலர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் சிலர், நான்கு தலித்துகளை 'மாட்டை கொன்றனர்' என்று சொல்லி காட்டுமிராண்டித்தனமாக அடித்து துன்புறுத்தினர். இதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட 20,000 தலித் மக்கள் கூடினர். இந்த பெரும் படைக்குத் தலைவனாக செயல்பட்டவர் தான் இந்த ஜிக்னேஷ் மேவானி என்ற இளம் வழக்கறிஞர். "பசு மாட்டின் வாலை நீ வைத்துக்கொள், எங்கள் நாட்டை எங்களிடம் கொடு" இதுதான் அவரின் முழக்கம்.

ஆம் ஆத்மி கட்சியில் இருந்த இவரை, அரசியல் நோக்கத்துடன் தான் இவ்வாறெல்லாம் செய்கின்றார் என்று பிஜேபி விமர்சித்ததால் 'அரசியல் எனது நோக்கமல்ல, மக்களுக்கு தொண்டு செய்வதுதான்' என்று கட்சியில் இருந்து விலகினார். இந்தத் தேர்தலில் கூட காங்கிரஸ் இவரை கட்சியில் சேர அழைத்தது, அதன் சார்பாக போட்டியிட கூறியது. இவர் பிரச்சாரம் செய்வதை பார்த்த மற்ற அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் நிச்சயம் வியப்பை தான் அழிக்கும். வட இந்திய அரசியல்வாதிகளின் சீருடையான குர்தா, குல்லா எதுவும் அணியாமல். சர்ட், பாண்ட், ஷார்ட்ஸ் போன்ற உடையை அணிந்துதான் பிரச்சாரம் மேற்கொண்டார். வடகாமில் இவரை நிறுத்துவதற்காக தன் சார்பில் வேட்பாளரை நிறுத்தாமல், இவரை ஆதரித்தது காங்கிரஸ். ஆரம்பம் முதலே பிஜேபிக்கு போட்டியாக இருந்த இவர், தேர்தலிலும் பிஜேபி வேட்பாளர் விஜய் சக்கரவர்த்தியை ( முன்னர் காங்கிரஸில் இருந்தவர், சீட்டு தரவில்லை என்று பிஜேபிக்கு மாறியவர்) எதிர்த்து 60,000 வாக்குகளுக்கு மேல் பெற்று சிறப்பாக வெற்றிபெற்றார். "பசு மாட்டின் வாலை நீ வைத்துக்கொள், எங்கள் நாட்டை எங்களிடம் கொடு" என்ற தன் முழக்கத்தின் முதல் அடியை வெற்றிகரமாக வைத்துவிட்டார். கோட்டைகள் உடையுமா என்று எதிர்காலம் பதில் சொல்லும்.
சந்தோஷ் குமார்