Skip to main content

இவ்வளவு பெரிய பிரச்னை வரும் என்றும் எதிர்பார்க்காத அமித்ஷா... நினைத்து பார்க்காத எதிர்ப்பு... அதிர்ச்சியில் பாஜக!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பா.ஜ.க. அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த மசோதா கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. தற்பொழுது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் இந்த மசோதா பற்றி ஒருவித அச்சத்துடனே பலரும் பேசுகிறார்கள்.

"இந்தியாவின் பூகோளவியலை புரிந்து கொள்ளாமல் இந்த மசோதாவை கொண்டு வந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு கொல்கத்தா. இது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் தலைநகராக இருந்தது. இது வங்கதேச தலைநகரான டாக்காவுக்கு பக்கத்தில் உள்ள நகரம். மேற்கு வங்கத்தின் இரண்டாவது தலைநகரான சிலிகுரியிலிருந்து நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகள் கூப்பிடும் தொலைவில் இருப்பவை. அதேபோல் மேகாலயா, நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்கள். இவை சீனாவுடனும் வங்கதேசத்துடனும் எல்லையை பகிர்ந்து கொண்டிருப்பவை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வங்கதேசத்திலிருந்து மக்கள் கால்நடையாக வந்து சென்ற மாநிலம்தான் அஸ்ஸாம். பெரும்பாலும் பிரம்மபுத்திரா நதிதான் இந்தியாவையும் வங்கதேசத்தையும் பிரிக்கிறது. வங்கதேசத்திலிருந்து இந்துக்கள், முஸ்லிம்கள் என பலர் இந்தியாவிற்குள் வந்திருக்கிறார்கள். அவர்கள் எந்த அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்றால்... அங்கிருந்து வந்த இந்துக்களுக்கு குடியுரிமை கொடுத்தாலே அஸ்ஸாம் மாநிலத்தின் பூர்வகுடி களான அசாமியர்கள் பேசும் அஸ்ஸாமி மொழி சிறுபான்மையாகிவிடும். நாகாலாந்து மாநிலத்தின் பூர்வகுடிகளான நாகர்கள் சிறுபான்மை மொழியாகிவிடும். அதனால் இந்த அகதிகள் இந்துக்களோ முஸ்லிமோ யாருக்கும் குடியுரிமை தரக்கூடாது என அம்மாநில பூர்வகுடிகள் பல வருடமாக போராடி வருகிறார்கள்.

 

bjp



காஷ்மீரில் நிலத்தை இந்தியர்கள் வாங்குவதற்கு தடை இருந்தது. அதேபோல் வடகிழக்கு மாநிலங்களிலும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் நிலம் வாங்க தடை இருக்கிறது. காஷ்மீரில் 370-வது பிரிவை நீக்கி அந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, நிலம் வாங்க தடைவிதித்த 356 (ஏ) பிரிவையும் ரத்து செய்தது. காஷ்மீரில் செய்ததை வடகிழக்கு மாநிலங்களில் செய்ய முடியாது என்பதால் இந்தியாவின் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் நிலம் வாங்க தடை செய்யும் 356 (ஏ) பிரிவை காஷ்மீரில் நீக்கியது போல் வடகிழக்கு மாநிலங்களில் நீக்க முடியாது என அறிவித்தது. காஷ்மீரைப் போலவே முடியாட்சிகளாக இருந்த இந்த வடகிழக்கு மாநிலங்களை 356 (ஏ) போன்ற சலுகைகளை கொடுத்து தான் இந்தியா இணைத்துக் கொண்டது. எனவே அந்த மாநிலங்களை தொடவே மத்திய பா.ஜ.க. அரசு பயந்தது. காஷ்மீரில் 370-வது பிரிவை நீக்கியது வெற்றி என்கிற மிதப்பில் வடகிழக்கு மாநிலங்களில் கை வைத்துள்ளது'' என்கிறார் தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மாத்யூ சாமுவேல்.

 

bjp



"இந்த மசோதாவில் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையராக இருக்கும் இந்துக்கள் அங்கிருந்து விரட்டப் படுகிறார்கள். அவர்களுக்கு குடியுரிமை தருகிறோம். அங்கிருந்து வந்த முஸ்லிம்கள் அந்தந்த நாட்டுக்கே திரும்பிப்போக வேண்டும் என மத்திய அரசு சொல்கிறது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாகப் போகும் இந்த மசோதாவில் இலங்கை, பர்மா எனப்படும் மியான்மர் ஆகிய நாட்டு அகதிகளுக்கு இடமில்லை. இலங்கை, பர்மா இரண்டு நாடுகளிலும் பவுத்தர்களின் பேரினவாத அரசுகள் செயல்படுகின்றன. எப்படி பாகிஸ்தானின் அதிபரான ஜியாவுல் ஹக் பாகிஸ்தானை முஸ்லிம் ராஜ்ஜியமாக அறிவித்தாரோ அதுபோல் வங்க தேசத்தின் அதிபராக இருந்த முஜ்புர் ரஹ்மானின் மனைவி தாலிதா ஜியா வங்கதேசத்தை முஸ்லிம்களின் நாடாக அறிவித்தார். அதனால் இந்துக்கள் வெளியேறினார்கள். இலங்கை, பர்மா பேரினவாத அரசுகளின் செயல்பாடுகளால் ஏகப்பட்ட தமிழ் இந்துக்களும், பர்மிய இந்துக்களும், இன்று 40 லட்சம் பேர் என மதிப்பிடப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்களைப் போலவே இந்தியாவிற்குள் வந்திருக்கிறார்கள். இலங்கையிலிருந்து வந்த இந்துக்களையும் பர்மாவிலிருந்து வந்த இந்துக்களையும் குடியுரிமை வழங்குவதற்காக சேர்க்காமல் வெறும் பாகிஸ்தான், வங்கதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இந்துக்களை மட்டும் இந்திய குடிமகன்களாக மாற்றுவோம் என சட்டம் இயற்றுவது, அடிப்படையில் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்திய அரசியல் சாசனம் தனது 14-வது பிரிவில் சட்டத்தின் முன் அனைவரும் சமம். அனைவருக்கும் சம பாதுகாப்பு என்பதை உறுதி செய்கிறது. இந்திய குடிமக்கள் அல்லாதோருக்கும் இந்த பாதுகாப்பு இருக்கிறது. இந்த சட்டம் இந்தியாவில் குடியேறிய அனைவரையும் சமமாக நடத்தவில்லை. எந்த ஒரு சட்டத்தை கொண்டு வந்தாலும் அதில் நியாயமான பாகுபாடு என்கிற கோட்பாடு நிச்சயம் இடம் பெற வேண்டும். அதனால் இது சுப்ரீம் கோர்ட்டின் விசாரணைக்குப் பிறகுதான் நடைமுறைக்கு வரும்'' என்கிறார்கள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்.

 

cab issues



"இந்த சட்டம் வடகிழக்கு மாநிலங்களுக்கு பொருந்தாது. அசாம் மக்களின் கவுரவம் பாதிக்கப்படாது' என நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தாலும் அசாம் கலவரக் காடானது. "மோடி ட்விட்டரில் இந்தியிலும் பெங்காளியிலும் அஸ்ஸாமி மொழியிலும் போடும் ட்வீட்களை அஸ்ஸாமியர்களால் படிக்க முடியாது. ஏனென்றால் அங்கு இன்டர்நெட் இயங்கவில்லை. இது மோடிக்குத் தெரியாதா?' என சோனியா காந்தி கிண்டலடித்திருக்கிறார்.

 

cab bill issues



அசாம், திரிபுரா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் முழு அடைப்பு நடந்து கொண்டிருக்கிறது. பேருந்துகள், தனியார் வாகனங்கள் ஓடவில்லை. ரயில் பாதைகளில் ரயில் ஓடாத அளவிற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அஸ்ஸாமில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடத்தும் போராட்டம்... ஏதோ புரட்சி நடப்பதைப்போல இருந்ததை பார்த்து மத்திய அரசு மிரண்டு போனது. பாராளுமன்றத்தின் மக்களவையில் இந்த மசோதாவை சிவசேனா ஆதரித்தது. மராட்டியத்தில் சிவசேனையுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி கடுமையாக எச்சரித்ததால் மாநிலங்களவையில் எதிர்த்து ஓட்டுப் போடாமல் வெளிநடப்பு செய்து மறைமுகமாக இந்த மசோதாவை ஆதரித்தது.


காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேரள மாநில தலைவர் வயலார் ரவி போன்றவர்களே சபைக்கு வரவில்லை. தமிழகத்தின் அ.தி.மு.க.வைச் சேர்ந்த வேலூர் முகம்மது ஜான் உட்பட 11 பேரின் ஆதரவுடன் மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்றிய பா.ஜ.க., வடகிழக்கு மாநிலங்களில் இவ்வளவு எதிர்ப்பு வரும் என எதிர்பார்க்கவில்லை. முழுக்க முழுக்க போராடும் மக்களை கட்டுப்படுத்த இந்திய ராணுவமே களத்தில் இறக்க வேண்டி வரும் என அமித்ஷாவே எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள்.

இந்த மசோதா வடகிழக்கு மாநிலங்களை மட்டும் பாதிக்காது. இந்தியா முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு தமிழகத்தில் இன்று பல்வேறு கூலி வேலைகளை செய்யும் வடநாட்டவர் எல்லாம் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களில் பெரும்பான்மையானோர் வாழ வழியில்லாமல் பங்களாதேஷிலிருந்து அசாமிற்கு வந்து, அங்கு ஒரு ஆதார் கார்டை தயார் செய்து கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள். அவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும். அவர்களில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்கள். அதேபோல் கேரளாவில் மட்டும் வெளிநாட்டிலிருந்து வந்த இஸ்லாமியர்கள் ஒன்றரை லட்சம் பேர் குடியிருக்கிறார்கள். கேரளாவுக்கு வந்தவர்கள் அங்குள்ள பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார்கள். அந்த குடும்பங்களின் நிலை என்னவென கேள்வி எழுந்துள்ளது. உ.பி., பீகார் போன்ற மாநிலங்களி லும் வெளிநாடுகளிலிருந்து வந்த இஸ்லாமியர்கள் உள்ளூர் மக்களோடு இரண்டற கலந்திருக்கிறார்கள். மேற்கு வங்காளத்தில் வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்கள் பங்களாதேஷிலிருந்து வந்து பல ஆண்டுகளாக குடியிருக்கிறார்கள். மேற்கு வங்க அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் அவர்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக மம்தாவை ஆதரிக்கிறார்கள். அதனால் பீகாரில் இந்த மசோதாவை ஆதரித்த ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ்குமாருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன.


மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் "குடியுரிமை சட்டத் திருத்தம் தவறான திசையை நோக்கிய ஆபத்தான பயணமாகும். இது இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யும் அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது. இதனால் பல மில்லியன் இஸ்லாமிய மக்கள் சிறைகளில் அடைக்கப்படுவார்கள். ஹிட்லர் யூத மக்களை சிறையிலடைத்தது போல இந்திய நாடு முழுவதும் சிறைகள் உருவாகும். பல லட்சம் மக்கள் வெளியேறுவார்கள். இந்த மசோதாவை கொண்டு வந்த அமித்ஷாவுக்கு அமெரிக்கா வர தடைவிதிக்க வேண்டும்' என அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்தத்தை அறிமுகம் செய்து பேசிய அமித்ஷா "இந்தியாவின் உண்மையான குடிமக்கள் யார் என கணக்கெடுக்க நாடு முழுவதும் அசாம் மாநிலத்தில் செய்தது போல கணக்கெடுப்பு நடத்தப்படும்' என்றார். "அப்படியொரு கணக்கெடுப்பை மேற்கு வங்காளத்தில் நடத்த விட மாட்டோம். அசாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி முதலில் 40 லட்சம் பேர் வெளிநாட்டினர் என கணக்கெடுத்தனர். பின்னர் அது 19 லட்சமானது; 19 லட்சம் பேர் நாடற்றவர்கள் என மத்தியஅரசு அறிவித்துள்ளது. அவர்கள் கோர்ட் படிகளிலும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிலை மேற்கு வங்காளத்தில் உருவாக விட மாட்டேன்' என்கிறார் மம்தா பானர்ஜி.

"பிரான்சு நாட்டில் தீவிரவாத தாக்குதல் வந்த போது அந்நாட்டில் குடியேறி இருந்த முஸ்லிம்களை கணக்கெடுத்து வெளியேற்ற நினைத்த அரசின் நடவடிக்கையால் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டனர். அதை இந்தியாவில் செய்ய நினைக்கிறார் மோடி' என்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். "அடுத்து பொது சிவில் சட்டம்தான். இந்த சட்டத் திருத்தத்தை சுப்ரீம் கோர்ட் எப்படி அணுகுகிறது என்பதை பொறுத்துதான் அது வரும்' என்கிறார் சுப்ரீம் கோர்ட் விசாரணையை விரிவாகத் தரும் பிரபல பத்திரிகையாளரான ஜெ. வெங்கடேசன்.

இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் இந்தியா ஒரு இறையாண்மை மிக்க மதச்சார்பற்ற சமதர்ம ஜனநாயக குடியரசு என்கிறது. இந்தியாவில் வாழும் அனைவருக்கும் சம உரிமை என்கிறது. அந்த அடிப்படை உரிமைக்கு மாறாக, மதக் கோடாரி கொண்டு இந்தியாவை பிளவுபடுத்தி "இந்து'யா ஆக்கும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பலை கிளம்பியுள்ளது.