திருச்சி மத்திய சிறையில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கு படிப்பும், தொழிற்கல்வியும், உளவியல் ரீதியாக அறிவுரைகளும் வழங்கப்பட்டு வந்தன. அதேபோல், இச்சிறைச்சாலைக்குள் 250 ஏக்கர் பரப்பளவிலுள்ள விவசாய நிலத்தில், இதற்கு முன்பு சிறை கண்காணிப்பாளர்களாக இருந்தவர்கள், கைதிகளைக்கொண்டு விவசாயம் செய்து காய்கறிகள், கீரை வகைகளை விளைவித்து, விற்பனை மற்றும் உணவகம் என்று பெரிய அளவில் வர்த்தகமே செய்துவந்தனர்.
ஆனால் தற்போது சிறைத்துறை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டாள், கைதிகளுக்கு இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை வழங்காமல், அலுவலகத்திற்கு வருவதும், அலுவலக ரீதியான பணிகளைச் செய்வதுமாக மட்டுமே தனது கடமையை முடித்துக்கொள்கிறார் என்று கூறப்படுகிறது. அதேபோல், சிறைத்துறையின் டி.ஐ.ஜி.யாக இருக்கும் ஜெயபாரதியும் கைதிகளின் நலனுக்காக பெரிய அளவில் எந்த பணிகளையும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. இரண்டு பெண் அதிகாரிகளும் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை எந்த செய்தியாளர்களின் அழைப்பையும் எடுப்பதில்லை.
டி.ஐ.ஜி. மட்டும் தன்னால் முடிந்தவரை சம்பாதிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், திருச்சி மண்டலத்திற்குட்பட்ட 29 கிளைச் சிறைகளில், ஒவ்வொன்றிலிருந்தும் மாதாமாதம் ஐயாயிரம் ரூபாய் கொடுத்தாக வேண்டுமென்ற வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறையிலுள்ள கைதிகளின் உணவுக்காக அரசு வழங்கும் படிக்காசு, சிறைக்குள் கைதிகளுக்கு தனிப்பட்ட சலுகைகள் செய்து தருவதற்கு தனியாக ஒரு ரேட் என்று கொடிகட்டிப் பறக்கிறார் டி.ஐ.ஜி. சமீபத்தில் கூட பட்டுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற விசாரணைக் கைதி பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் திருச்சி மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.
இந்நிலையில், தன்னை தஞ்சாவூர் சிறைக்கு அனுப்ப வேண்டுமென்று உளவுப் பிரிவு முதல்நிலை தலைமைக் காவலர் பிரபாகரனிடம் கேட்டுள்ளார். இத்தகவலை பிரபாகரன் சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதியிடம் சொன்னதோடு மட்டுமல்லாமல், செந்தில்குமாரிடமிருந்து டி.ஐ.ஜி.க்கு 50 ஆயிரமும், அவருக்கு 40 ஆயிரமும் பெற்றுக்கொண்டு அவரை தஞ்சை சிறைக்கு பத்திரமாக அனுப்பி வைத்துள்ள செய்தி, காவலர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
டி.ஐ.ஜி. ஜெயபாரதி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேட்டபோது, "முற்றிலும் தவறான தகவல். சிறைக்குள் யாராவது கிளப்பிவிட்ட புரளியாக இருக்கும்'' என்று தன் மீதான லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்தார்.
சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.