Skip to main content

தமிழ்நாடு தாண்டி கேரளாவிலும் கொடிகட்டிப் பறக்கும் கவிஞர் வைரமுத்துவின் புகழ்!

Published on 29/06/2021 | Edited on 29/06/2021

 

writer sura

 

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற மனிதர்களாக இருக்கக்கூடியவர்கள், தமிழ்நாட்டைத் தாண்டியும் புகழ் பெறுவது தமிழர்களான நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயமே. காரணம், அவர்கள் உலக அரங்கிலோ அல்லது வேறு மாநிலத்திலோ தமிழையும் தமிழர்களையும் பெருமைப்படுத்துகிறார்கள். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து எப்படி கேரளாவில் கொண்டாடப்படுகிறார் என்பது பற்றி உங்களுக்குக் கூறுகிறேன்.

 

வைரமுத்துவின் உதவியாளரான பாஸ்கர் என்னுடைய நெருங்கிய நண்பர். ஒருநாள் அவர் எனக்குப் ஃபோன் செய்து, “வைரமுத்து அவர்கள் உங்களைச் சந்திக்க வேண்டும் என்றார். நீங்கள் அவர் வீட்டிற்கு வர முடியுமா” என்றார். நான் உடனே சரி எனக் கூறிவிட்டு, என்ன விஷயம் என்று கேட்டேன். வைரமுத்துவின் புத்தகம் ஒன்று மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அது பற்றி உங்களுடன் பேச வேண்டும் என்றார். மறுநாள், பெசன்ட் நகரில் இருக்கும் வைரமுத்துவின் வீட்டிற்கு நான் சென்றேன். ‘நிழல்கள்’ பட காலகட்டத்திலிருந்தே வைரமுத்து எனக்கு நல்ல பழக்கம். தமிழில் சாகித்ய அகாடமி விருது வாங்கிய அவரது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலை மலையாளத்தில் மொழிபெயர்க்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. அந்தப் புத்தக மொழிபெயர்ப்பின் முதல் அத்தியாயத்தை என்னிடம் கொடுத்தார்கள். அதைப் படித்தவுடன் எனக்கு மிகுந்த ஆச்சர்யம். காரணம், அது அற்புதமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது. இதுவரை அப்படியான ஒரு மலையாள மொழிபெயர்ப்பை நான் வாசித்ததில்லை. 

 

“மொழிபெயர்ப்பு எப்படி இருக்கிறது சுரா” என வைரமுத்து என்னிடம் கேட்டார். “மிக அற்புதமாக வந்திருக்கிறது” எனக் கூறிய நான், “நீங்களே மலையாளத்தில் எழுதியதுபோல இருக்கிறது” என்றும் கூறினேன். உடனே மொழிபெயர்ப்பாளர் யார் என்று வைரமுத்துவிடம் கேட்டேன். வெங்கடாஜலம் என்ற ஒருவர் மொழிபெயர்ப்பு செய்ததாக அவர் கூறினார். “வெங்கடாஜலம் மலையாளியா” என்று நான் கேட்க, “அவர் கோழிக்கோட்டில் வசிக்கும் தமிழர்தான்” என வைரமுத்து கூறினார். நான் அவருக்குப் பாராட்டு தெரிவித்த விஷயத்தை நீங்கள் அவரிடம் கூறுங்கள் என்றேன். உண்மையிலேயே வைரமுத்துவின் எழுத்தை மொழிபெயர்ப்பு செய்வது என்பது எளிதான வேலையல்ல. மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை பக்கத்திலுள்ள பல மரங்கள், செடிகள், கொடிகள் பற்றி எழுதியிருப்பார். அதைத் தவிர்த்து மண் சார்ந்த பல விஷயங்கள் குறித்தும் எழுதியிருப்பார். அதை அப்படியே மலையாளத்தில் மொழிபெயர்ப்பது என்பது சாதாரண விஷயமில்லை. ஆனால், வெங்கடாஜலம் மிக அற்புதமாக செய்திருந்தார். 

 

என்னைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே வெங்கடாஜலத்திற்கு வைரமுத்து ஃபோன் செய்தார். “மூத்த பத்திரிகையாளரும் சிறந்த மொழிபெயர்ப்பாளருமான சுரா, உங்களுடைய மொழிபெயர்ப்பை மிகவும் பாராட்டினார்” என வைரமுத்து அவரிடம் தெரிவித்தார். உடனே, வெங்கடாஜலம் என்னுடைய மொழிபெயர்ப்பு பற்றி அவருக்கு முன்னேரே தெரியும் என்றும் என்னுடைய பெயர் அவருக்கு நன்கு பரிட்சயமான பெயர் என்றும் கூறினார். உடனே வைரமுத்து, நீங்களே அவரிடம் பேசுங்கள் என்று கூறி ஃபோனை என்னிடம் கொடுத்தார். நான் அவருக்குப் பாராட்டு தெரிவித்தேன். பொதுவாக தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பெரிய அளவில் வெற்றிபெற்றதில்லை. மலையாள எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் வரவேற்பைவிட குறைவான வரவேற்பே தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு கேரளாவில் இருந்தது. அந்த நிலையை வைரமுத்துவின் புத்தகம் மாற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. புத்தகம் வெளியானபோது நான் நினைத்தது அப்படியே நடந்தது. பின்னர், ‘வைரமுத்து சிறுகதைகள்’ என்று ஒரு புத்தகம் வெளியானது. அந்தப் புத்தகத்தையும் வெங்கடாஜலம்தான் மொழிபெயர்ப்பு செய்திருந்தார். மிகக் குறுகிய காலத்திலேயே அந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு அனைத்தும் விற்றுத்தீர்ந்தது. அந்த இரு புத்தகங்கள் மூலம் கேரளாவில் வைரமுத்துவிற்கு நல்ல பெயர் கிடைத்தது. அந்தப் புத்தகங்களை வெளியிட்ட பதிப்பகத்திற்கும் நல்ல லாபம் கிடைத்தது. தமிழகம் தாண்டி கேரளாவிலும் புகழ்பெற்ற எழுத்தாளராக வைரமுத்து மாறியிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

 

 

சார்ந்த செய்திகள்