எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூ-ட்யூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், ‘நடிகர் விஜயகாந்தின் எதிர்காலத்தை முன்னரே கணித்த எம்.ஜி.ஆர்’ என்ற தலைப்பில் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
சில கேள்விப்படாத விஷயங்கள், நமக்குத் தெரியவரும்போது மிக ஆச்சர்யமாக இருக்கும். இது உண்மைதானா... இதை நம்பலாமா என்று நமக்குள் குழப்பமும் வரும். நடிகர் விஜயகாந்த் பற்றிய அப்படியொரு விஷயத்தை உங்களுக்குக் கூறுகிறேன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள், எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகராக விஜயகாந்த் வருவார் என்று ஆரம்ப காலத்திலேயே கணித்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது நடந்தது 1980ஆம் வருடம். அந்த சமயத்தில் ஃபிலிமாலயா பத்திரிகையில் நான் உதவி ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். வடலூர் சிதம்பரம் தயாரிப்பில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் உருவான ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது. விஜயகாந்தின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றிபெற்ற முதல் திரைப்படம் என்றால் அது இந்தப் படம்தான்.
அந்தக் காலத்தில் சேட்டிலைட் சேனல்களெல்லாம் கிடையாது. தொலைக்காட்சி என்றாலே தூதர்ஷன் சேனல் மட்டும்தான். அதில், ஒளிபரப்பாகும் ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியில் 7 பாடல்கள் போடுவார்கள். அது ஒளிபரப்பாகும்போது தெருவில் ஒரு ஆள்கூட இருக்கமாட்டார்கள். தற்போது எம்.ஜி.ஆர் நினைவு இல்லமாக இருக்கும் இடம்தான் எம்.ஜி.ஆரின் அன்றைய அலுவலகம். கோட்டையில் முதல்வர் பணிகளை முடித்துவிட்டு சாயங்கால நேரம் அலுவலகத்திற்கு வருவார். அந்தக் காலகட்டத்தில் சுபா சுந்தரம் என்பவர் பிரபல புகைப்படக் கலைஞராக இருந்தார். அவரது சுபா ஃபோட்டோ சர்வீஸ் நிறுவனம் மூலமாகத்தான் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்களின் புகைப்படங்கள் பத்திரிகையாளர்களுக்குக் கிடைக்கும். அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோரை அனைவராலும் புகைப்படம் எடுத்துவிட முடியாது. சுபா சுந்தரம் மாதிரியான சில ஆட்கள் மட்டுமே அதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின் அவர்கள் வாயிலாக தங்களுக்கு வேண்டிய புகைப்படங்களைப் பத்திரிகை நிறுவனங்கள் பெற்றுக்கொள்வார்கள். நான் ஃபிலிமாலயாவில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதால் சுபா சுந்தரத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.
ஒருநாள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், “நீ விஜயகாந்தை சந்திப்பாயா” என்றார். “என்னண்ணே விஷயம்” என்றேன். “நேற்று தலைவர் எம்.ஜி.ஆரைப் ஃபோட்டோ எடுக்க அவர் ஆஃபிஸிற்குப் போயிருந்தேன். ஃபோட்டோ எடுத்துவிட்டு பேசிக்கொண்டிருக்கையில், ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘தனிமையிலே ஒரு ராகம்...’ பாடலை ஒளியும் ஒலியுமில் கேட்டதாகவும், அதில் விஜயகாந்த் சிறப்பாக நடித்திருந்ததாகவும் எம்.ஜி.ஆர் கூறினார். பையனுக்கு நடிகருக்கான அத்தனை அம்சமும் இருக்கிறது. எதிர்காலத்தில் பெரிய நடிகராக வருவான் பாருங்கள் என்றும் என்னிடம் கூறினார். பின்பு, நீங்கள் விஜயகாந்தை பார்த்தால் எம்.ஜி.ஆர் பாராட்டிய விஷயத்தை அவரிடம் கூறுங்கள்” என என்னிடம் கூறினார். தற்போது உள்ளது போல தகவல் தொடர்பு வசதி அந்த சமயத்தில் பரவலாக இல்லை. விஜயகாந்தும் வேறொரு படத்தின் படப்பிடிப்பிற்காக வெளியூரில் இருந்தார். அதனால், இந்தச் செய்தியை விஜயகாந்த்திடம் உடனடியாகத் தெரிவிக்க முடியவில்லை. சில நாட்கள் கழித்து, விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் இப்ராஹிம் ராவுத்தரை தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அவரிடம் இந்த விஷயத்தை விஜயகாந்திடம் தெரிவிக்கும்படி நான் கூறவும், அவர் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. இரு கைகளையும் உயர்த்தி வானத்தை அண்ணாந்து பார்த்து அல்லாவிற்கு நன்றி தெரிவித்தார்.
இந்த சம்பவம் நடந்து நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று எம்.ஜி.ஆர், சுபா சுந்தரம் இருவரும் உயிரோடு இல்லை. ஒரு கட்டத்தில், எம்.ஜி.ஆர் கூறியதுபோல ரஜினிகாந்திற்கு அடுத்து மிகப்பெரிய கமர்ஷியல் கதாநாயகன் என்ற அந்தஸ்துடன் விஜயகாந்த் கொடிகட்டிப் பறந்தார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் கணிப்பை நினைத்துப் பார்க்கும்போது எம்.ஜி.ஆர் மீது மிகப்பெரிய ஆச்சர்யமும், அளவற்ற மரியாதையும் உண்டாகிறது. எம்.ஜி.ஆர் ஒரு தீர்க்கத்தரிசி என்று கூறுவார்களே, அதற்கு இதுவும் ஓர் உதாரணம்.