எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் பொன்வண்ணன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
மனிதர்கள் யாராக இருந்தாலும் உண்மையாக இருந்தால் அதற்கேற்ற வளர்ச்சி, அதற்கேற்ற பலன் நிச்சயமாக நமக்கு கிடைக்கும். உண்மையாக இருப்பது என்பது நல்ல குணமும்கூட. நடிகர் பொன்வண்ணனிடம் அந்த நல்ல குணம் உள்ளது. ஒரு சம்பவத்தை உங்களுக்கு உதாரணமாக கூறுகிறேன். நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணன் என்னுடைய நெருங்கிய நண்பர். தொடக்க காலங்களில் அன்னை வயல் என்ற படத்தை இயக்கினார். ஆனால், அந்தப் படம் பெரிய அளவில் ஓடவில்லை. பின்னர், தொலைக்காட்சி தொடர்கள் இயக்கம், தொடர்களில் நடிப்பது, சினிமாவில் நடிப்பது என அடுத்தடுத்த முயற்சிகள் செய்தார்.
பொன்வண்ணனின் உண்மையான பெயர் ஷண்முகம். சினிமாவில் அவர் நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கு தனிப்பட்ட பி.ஆர்.ஓ போல நான் செயல்பட்டேன். நாங்கள் இருவரும் தினமும் சந்தித்து பேசிக்கொள்வோம். அவர் தேர்ந்த இலக்கிய ரசனை உடையவர் என்பதால் என்னுடைய மொழிபெயர்ப்பு படைப்புகளை அவருக்கு கொடுப்பேன். அதேபோல அவர் மிகச்சிறந்த ஓவியரும்கூட. நிறைய அற்புதமான ஓவியங்கள் வரைந்துள்ளார். அவருடைய ஓவியங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகர். பொன்வண்ணனின் ஓவியத்திறமை குறித்து 99 சதவிகித மக்களுக்கு தெரியாது. ஏன், திரைத்துறையில் இருப்பவர்களுக்கே தெரியாது. இவ்வளவு திறமை உடையவராக இருக்குறீர்கள். இதுவெல்லாம் வெளியே தெரியவில்லையே என்று அவரிடமே நான் கூறியிருக்கிறேன். தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள், ஓவியர்களை யாரும் கொண்டாடுவதில்லை. கேரளாவில் நம்பூதிரி என்று ஓவியர் ஒருவர் இருக்கிறார். மாத்ரு பூமியில் கதைகளுக்கு அவர் வரையும் ஓவியத்தை அந்த மக்கள் அவ்வளவு ரசிப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில் நடிகர்களையும் நடிகைகளையும்தான் மக்கள் ரசிக்கின்றனர்.
ஒருநாள், நானும் அவரும் பேசிக்கொண்டு இருக்கையில் இதுவரை யாருக்கும் கூறாத விஷயத்தை உங்களிடம் கூறுகிறேன் என்றார். நான் என்ன என்று கேட்க, நடிகை சரண்யாவை நான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்றார். அதைக் கேட்கும்போது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. இப்படி ஒரு எண்ணம் இருப்பதாக இதற்கு முன் அவர் வெளிக்காட்டியதே இல்லை. எப்போது திருமணம் என்றேன். இன்னும் இரண்டு மாதத்தில் என்றார். அந்த நேரத்தில் பொன்வண்ணனுக்கு பெரிய சம்பாத்தியம் எல்லாம் கிடையாது. அப்படியான சூழலில் சரண்யாவின் அப்பாவிடம் சென்று பொன்வண்ணன் பெண் கேட்டுள்ளார். மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய ஏ.பி.ராஜின் மகள்தான் நடிகை சரண்யா.
அவரிடம் பெண் கேட்கையில், "சினிமாவில் நான் அசிஸ்டன்ட் டைரக்டரா ஒர்க் பண்ணிருக்கேன். டீவி சீரியல்களிலும் நடிச்சிருக்கேன். எதிர்காலத்தில் நிறைய படங்களிலும் நடிப்பேன். அதேபோல நிச்சயம் இயக்குநர் ஆவேன். இதெல்லாம் நடக்காமல் போனால்கூட என்னிடம் ஓவியம் வரையும் திறமை இருக்கிறது. அதை வைத்து சம்பாதித்து உங்கள் மகளை நல்லபடியாக பார்த்துக்கொள்வேன். எனவே உங்கள் பொண்ணை எனக்கு திருமணம் செய்துகொடுங்கள் எனத் திறந்த மனதுடன் கேட்டுள்ளார். நான் அப்படி ஆவேன் இப்படி ஆவேன் என்றெல்லாம் கூறாமல் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசிய பொன்வண்ணனின் இந்தப் பேச்சு சரண்யாவின் அப்பாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது. இரண்டு மூன்று நாட்களிலேயே அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். அதன் பின், இருவருக்கும் திருமணம் நடந்து, இன்று நல்ல கணவன் மனைவியாக இருவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.