Published on 17/04/2018 | Edited on 18/04/2018
சமீபத்தில் தமிழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனலில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற ரியாலிட்டி ஷோ நடந்து வருகிறது. அதில் நடிகர் ஆர்யா பங்குபெற்று தனக்கான மனப்பெண்ணை தேர்வு செய்கிறார். நீண்ட நாட்களாக தனக்கான பொருத்தமான மணப்பெண் தேடிவரும் ஆர்யா, இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன் டெலிவிஷனில் மணப்பெண்ணை தேர்வு செய்யும் நிகழ்ச்சியை நடத்தப்போவதாகவும் அதில் தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்கள் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என்று வீடியோவில் பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் ஆயிரக்கணக்கான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்த நிலையில் அதிலிருந்து 16 பெண்களை தேர்வு செய்து அவர்களிடம் இந்த நிகழ்ச்சி வாயிலாக நேர்காணல் நடத்தி வந்தார்.

சில மாதங்களாக நடந்து வந்த இந்த நிகழ்ச்சி தற்போது முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பங்குபெற்ற பெண்களில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு கடைசியாக சுஷானா, அகார்தா, சீதாலட்சுமி ஆகிய மூன்று பெண்கள் இறுதி போட்டிக்கு வந்துள்ளனர். இந்நிலையில் போட்டியின் இறுதி நாளான இன்று மாலை நடக்கும் இறுதி போட்டியில் மணப்பெண் யார் என்பதை ஆர்யா அறிவிப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்யும் பட்சத்தில் அந்த பெண்ணுடன் இரண்டு வருடங்கள் குடும்பம் நடத்த வேண்டும் என்றும், அதற்குள் விவாகரத்து செய்யக்கூடாது என்றும் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து மணப்பெண்ணாக தேர்வாகும் பெண் ஆர்யாவை மணக்க விருப்பம் இல்லை என்று அறிவித்தால் அதுவும் ஏற்கப்படும் என்று அவருக்கு உரிமை வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆர்யாவுக்கு நெருக்கமானவர்கள் கூறிய போது, ஆர்யா இப்பொழுது திருமணம் செய்யும் மனநிலையில் இல்லையென்றும் மேலும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அனைவரிடமும் மிகவும் நட்பாக பழகிவிட்ட ஆர்யா, அதில் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்தால் மற்றவர்கள் காயப்படுவார்கள் என்று எண்ணி குழப்பத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர். ஒருவேளை அப்படி ஆர்யா திருமணம் செய்யும் மனநிலையில் இல்லையென்றால் நிகழ்ச்சி எதற்கு? போட்டியாளர்களின் நிலை என்ன? ஒன்று புரிகிறது, சினிமா ஸ்ட்ரைக் நடந்தபோதும் ஆர்யாவுக்கு வேலைவாய்ப்பு.. போட்டியாளர்களுக்கு பிரபலம்.. நமக்கு பொழுதுபோக்கு.. அவ்வளவுதான் போல 'எங்க வீட்டு மாப்பிள்ளை'...