
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
இப்படம் மே மாதம் 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை மட்டும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.பாக்யராஜ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் டி.சிவா, பெப்சி தலைவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணி, நடிகை வனிதா விஜயகுமார், நமீதா, தயாரிப்பாளர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தேவயானி பேசுகையில், “என்னுடைய குடும்ப விழா இது. இந்த மேடையில் 30 வருடங்களுக்கு முன்பு என்னை அறிமுகம் செய்த இயக்குநர் கே.எஸ் அதியமானுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்கு திரை உலகில் திருப்புமுனை கொடுத்த படம் காதல் கோட்டை என்றாலும் திரையுலகில் என்னை முதன்முறையாக அறிமுகம் செய்து இந்த தமிழ்நாட்டிற்குள் அழைத்து வந்ததே இயக்குநர் கே.எஸ் அதியமான் தான். அவருக்கு எங்கேயுமே நான் நன்றியை வெளிப்படையாக சொன்னது இல்லை. இதுதான் அவருக்கு நன்றி சொல்லும் முதல் மேடை.
30 வருடங்களுக்குப் பிறகு இதுவரை மாறாமல் இருக்கும் அவரது குழுவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அது எவ்வளவு பெரிய ஒரு ஆசீர்வாதம். அது எனக்கு கிடைத்திருக்கிறது. மறுபடியும் இதுபோன்ற ஒரு அற்புதமான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். சின்ன படம், பெரிய படம் என்பதைவிட நல்ல படம் என்று சொல்லலாம். இது ஒரு அழகான கருத்துள்ள, இன்றைக்கு இருக்கக்கூடிய, பெற்றோர்களுக்கு தேவையான ஒரு படம். இந்தப் படத்தை வெளியிடும் பிளாக் பஸ்டர் விநியோக நிறுவனத்திற்கு நன்றி. இந்த படத்திற்கு நிறைய தியேட்டர்களை கொடுத்து கொஞ்சம் பொறுமையாக காத்திருந்து படம் பிக்கப் ஆகும் வரை படத்தை நீக்காமல் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். முன்பு எல்லாம் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து கூட பிக்கப் ஆகி ஓடி இருக்கிறது” என்று கூறினார்.