மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் இன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே பார்த்திபன் இப்படத்தை தஞ்சாவூரில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சென்று பார்த்துள்ளார். பிறகு தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று தரிசனம் மேற்கொண்டார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபன், "இந்த தஞ்சை மண்ணுக்கு என்னுடைய முதல் மரியாதையான வணக்கம். ராஜ ராஜ சோழன் பெருமையை சொல்லி மாளாது. கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு மேலாக சொல்லிவருகிறோம். நான் இப்பவும் ஆச்சர்யப்படுற விசயம், இந்த ராஜா செய்த சாதனை இன்னும் எத்தனை ஆயிரம் வருடங்கள் ஆனாலும் அப்படியே நிலைச்சு நிற்கும். நான் உள்ளுக்குள்ள ஒரு ராஜாதான். நான் மட்டும் இல்ல நாம் எல்லாரும் ஒரு ராஜா தான். இந்த வாழ்க்கை ஒரு ரசனைக்குரியதாக இருக்கணும். இந்த பெரிய கோவிலை பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு ரசனையோடு வாழ்ந்திருப்பார்கள் என்று உணரமுடிகிறது. அப்படி ஒரு ரசனையான படம் தான் இந்த பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வனில் ரொம்ப பாராட்டக்கூடியவர் முதலில் கல்கி.
ரொம்ப முன்னாடியே கற்பனையா ஒரு கதை எழுதி அந்த கதையை, நாம் எழுவது வருஷம் கழித்து படமாக்கி பார்ப்பது மிக பெருமையான விசயம். அதுல என்னுடைய பெருமை, இந்த தஞ்சாவூர் மண்ணில் வந்து நான் படம் பார்க்கணும்னு ஆசைப்பட்டது. படக்குழுவினர் அனைவரும் ஒவ்வொரு வேளையில் பிசியாக இருக்கிறார்கள். நான் உலகத்தை சுற்றி வருவதற்கு பதில் தஞ்சாவூர் மண்ணில் இந்த படத்தை பார்த்துவிட்டு, உலகத்தையே சுத்துன பெருமை என்ன இருக்கிறதோ அந்த பெருமை இந்த படத்தில் எனக்கு கிடைத்திருக்கு. போன ஜென்மத்தில் நான் சோழனா பிறந்திருப்பேனா என்று தெரியவில்லை. தொடர்ந்து இது போன்ற வாய்ப்புகள் அமைந்து வருகிறது" என பேசினார்.
மேலும், "ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் மறுபடியும் வரும். ஆனால் எனக்கு பதில் தனுஷ் அந்த ரோலில் நடிப்பார். முதல் பாகத்திலே தனுஷ் நடிப்பதாக இருந்தது. அதற்கு பதில் தான் நான் நடித்தேன். இப்ப இரண்டாம் பாகத்தில் நான் நடிப்பதற்கு பதில் தனுஷ் நடிப்பார். தனுஷ் நடித்தால் அது சிறப்பாகவே இருக்கும்." என கூறினார்.