அஜித் நடிப்பில் தயாராகியுள்ள 'விஸ்வாசம்' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. அந்தப் படத்தின் 'மோஷன் போஸ்டர்' கடந்த ஞாயிறன்று (25-11-18) வெளியானது. தமிழ் சினிமாவில் ட்ரைலர், டீசர், ஃபர்ஸ்ட் லுக், வரிசையில் சமீப காலமாக படங்களுக்கு 'மோஷன் போஸ்டர்' வெளியிடும் வழக்கம் உருவாகியிருக்கிறது. போஸ்டரையே வீடியோ பார்க்கும் எஃபக்டில் உருவாக்குவதே மோஷன் போஸ்டர் எனப்படுகிறது.
'விஸ்வாசம்' படத்தின் அறிவிப்பு வெளியானபோதிருந்தே அதற்கு அஜித் ரசிகர்கள் மத்தியிலேயே கலவையான எதிர்வினைகள்தான் இருந்தன. இதற்கு முன்பு வெளியான 'விவேகம்' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனது. 'விவேகம்', அஜித் - சிவா கூட்டணியின் மூன்றாவது திரைப்படம். அதனால், ஒரு மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்த்தனர் அஜித் ரசிகர்கள். ஆனால், மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பதாகவும் அதை 'விவேகம்' படத்தைத் தயாரித்த சத்யஜோதி நிறுவனமே தயாரிப்பதாகவும் செய்தி வர மகிழ்ச்சியும் குழப்பமும் கலந்த நிலையே அஜித் ரசிகர்களிடம் நிலவியது. 'வீரம்', 'வேதாளம்' பெற்ற வெற்றிகளை எண்ணி நம்பிக்கை கொண்டாலும், இன்னொரு புறம் ஒரு மாற்றம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் பல அஜித் ரசிகர்களுக்குள் இருந்தது.
படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் 'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இரட்டை வேடத்தில் அஜித் இருந்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், போஸ்டரின் வடிவமைப்பு சுமாராகவே இருந்தது, ஆனாலும் சமூக வலைத்தள ட்ரெண்டில் முன்னணியில் இருந்தது. அடுத்து சில நாட்களில் வெளிவந்த செகண்ட் லுக் போஸ்டர், முதலில் பார்க்க நன்றாக இருப்பதாகத் தோன்றியது. வண்ணமயமாக, விழாக்கோலமாக இருந்தது செகண்ட் லுக். ஆனால், தற்கால சினிமா ரசிகர்கள் சும்மா விடுவார்களா? போஸ்டரை ஆராய, அதில் ஒரே நபர் இரண்டு இடங்களில் இருப்பது, பின்னணி தொழில்நுட்ப வேலைகள் சரியாக இல்லாதது என குறைகள் தெரிய, அதை ட்ரோல் செய்யத் தொடங்கினர்.
அதன் பின் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அவரது தோற்றமும் ஸ்டைலும் வரவேற்பை பெற்றது. பின்னர் வெளிவந்த இன்னொரு போஸ்டரில் ரஜினிகாந்த் -சிம்ரன் இருவரும் இருந்தனர். பொங்கல் பராக் என்ற அறிவிப்போடு வெளியான அந்த போஸ்டர் சினிமா ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சமீப வருடங்களில் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவில்லை. வீரம் - ஜில்லா, வேதாளம் - தூங்காவனம் ஆகிய படங்களுக்குப் பின் இப்போது பேட்ட - விஸ்வாசம் இரண்டும் பொங்கலுக்கு வருகின்றனவா என்று பேச்சு நிலவியது. எந்தப் படம் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் அந்தப் படம் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். எனவே 'விஸ்வாசம்' பின்வாங்குமோ என்றும் கேள்வியெழுந்தது. அந்தக் கேள்வியை உடைக்கும் வகையில் 25ஆம் தேதி மாலை திடீரென வெளிவந்தது விஸ்வாசம் மோஷன் போஸ்டர். 'தூக்குதுரை' என்று அஜித்தின் பாத்திரப்பெயரையும் அதன் தன்மையையும் சொல்லும் வசனத்துடன் 'பொங்கல் வெளியீடு' என உறுதிப்படுத்தும் செய்தியையும் கொண்டிருந்தது, விஸ்வாசம் மோஷன் போஸ்டர்.
சற்று ஏமாற்றத்தில் இருந்த அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் அதிரடியாக இருந்த மோஷன் போஸ்டர், யூ-ட்யூபில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டு வெளியானதிலிருந்தே ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது. மிகக்குறைந்த நேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து தற்போது இரண்டே நாட்களில் 57 லட்சம் பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பரில் வெளியான 'பேட்ட' படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வரை 44 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து 1,47,000க்கும் மேலான லைக்குகளைப் பெற்றிருக்கிறது. இந்திய அளவில் பெரிய வெளியீடாகப் பார்க்கப்பட்ட அமீர்கானின் 'தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்' படத்தின் மோஷன் போஸ்டர் மூன்றாக வெளியானது. அதில் அமீர்கானை அறிமுகம் செய்யும் போஸ்டர் 56 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து 1,24,000க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில் 56 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து 4,42,000க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்ற 'விஸ்வாசம்' பட மோஷன் போஸ்டர் இந்திய அளவில் யூ-ட்யூப் சாதனை புரிந்திருப்பதாக திரைவிமர்சகர்கள் பகிர்கின்றனர். இப்படி, முதலில் விட்டதை இப்போது பிடித்திருக்கிறது 'விஸ்வாசம்'. சோஷியல் மீடியாவில் இப்படியென்றால் அரங்குகளில் எப்படியென்று வரும் பொங்கலன்று தெரிந்துவிடும்.