ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரித்திருக்கும் படம் 'நுங்கம்பாக்கம்'. நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் போலீசாக அஜ்மல், நடிக்கிறார். மேலும் புதுமுகம் ஆயிரா, மனோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். 'சுவாதி கொலை வழக்கு' என முதலில் தலைப்பு வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் பெயரை தற்போது 'நுங்கம்பாக்கம்' என படக்குழுவினர் மாற்றியுள்ளனர். எஸ்.டி. ரமேஷ் செல்வன் இயக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகர் விஷால், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் விக்ரமன், அஜ்மல், சினேகன், கதிரேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது விழாவில் நடிகர் விஷால் பேசியபோது.... "இந்த படத்தின் முந்தைய டைட்டிலான ஸ்வாதி கொலை வழக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன். ஒரு நிஜ சம்பவத்தை படமாக்கும் போது அது சம்மந்தமான டைட்டில் வைப்பது தானே நியாயம். அப்புறம் எதுக்கு இப்போ 'நுங்கம்பாக்கம்' என்று டைட்டிலை மாற்றினீர்கள். சென்சாருக்காகவோ, இல்லை யாருடைய நெருக்குதலுக்காகவோ, டைட்டிலை மாற்றினீர்கள். ஏன் பயப்படனும், இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு அதே எதிர்பார்ப்பு எனக்கும் இருக்கு. என்னோட இரும்புத்திரை படத்துக்கு போராட்டம் நடத்தி இரண்டு காட்சிகளை கேன்சல் செய்த கொடுமையையும் சந்தித்தேன். டிஜிட்டல் இந்தியா ஆதார் கார்டு பற்றி சொல்லப் பட்டதால் நானும் பிரச்சனையை சந்தித்தேன். பிரச்சனையை சந்திப்போம்" என்றார்
மேலும் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ்செல்வன் தொடர்ந்து பேசும் போது... "ஒரு கொலை பற்றிய கதையை படமாக எடுத்து விட்டு நான் ஊர் ஊராக ஓடி ஒளிய வேண்டியதாகி விட்டது. ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை. அந்தளவுக்கு பிரச்சனைகளை சந்தித்து விட்டேன். எனக்கு வேறு வேலை தெரியாது சினிமா மட்டும் தான் தெரியும். அதுக்காக தான் போராடிக் கொண்டிருக்கிறேன் நிச்சயம் நுங்கம்பாக்கம் நல்ல படமாக வரும்" என்றார்.