விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.
சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார்.