பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது பிறந்த நாள் விழா மற்றும் 62வது குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2024) நடைபெற்று வருகிறது. அதில் முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மரியாதை செய்தனர்.
அந்த வகையில் நடிகர் விஷால் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முழுக்க இன்று தேவர் ஜெயந்தி விழா கொண்டாடுகிறார்கள். அதை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், நாட்டு சுதந்திரத்துக்காக ஒரு படையைத் திரட்ட வேண்டும் என சொன்னபோது தமிழ் நாட்டில் இருந்து முதல் படையை அனுப்பியவர் முத்துராமலிங்க தேவர். அதை பார்த்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸே ஆச்சரியப்பட்டார். அவர் தேவராக இருந்தாலும் ஆயிஷா என்கிற முஸ்லீம் பெண்மணியிடம் தாய்ப்பால் குடித்தவர். கிறிஸ்டியன் கல்லூரியில் படித்தவர். அந்த வகையில் எம்மதமும் சம்மதமும் என நினைத்தவர் முத்துராமலிங்க தேவர்.
அவர் மக்களுக்கு நல்லது பண்ண வேண்டும் என யார்கிட்டையும் பணத்தை திரட்டாமல், சொந்த பணத்தில் உதவி செய்தவர். முதல் முதலில் ஆங்கிலேயரை பயமுறுத்தியவர் முத்துராமலிங்கத் தேவர். அந்த பெருமை எப்போதுமே நிலைக்கும். இவர் போல போராளி இருந்ததால்தான் சுதந்திரத்தை நாம் கொண்டாடுகிறோம். இந்த நிகழ்ச்சி என்னுடைய வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய நிகழ்ச்சி. 100 கலை நிகழ்ச்சிக்கு நிகரான உணர்வு இந்த ஒரு நிகழ்ச்சியில் எனக்கு இருக்கிறது” என்றார்.
.