இராவண கோட்டம் திரைப்படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் உடன் ஒரு சிறப்பு நேர்காணல்.
இராவண கோட்டம், கருவேல மர அரசியல் பற்றிய கதை இது. நிஜத்தில் நடந்த ஒரு கலவரம் போன்ற காட்சிகள் இதில் இன்ஸ்பிரேஷனாக இடம்பெற்றுள்ளது. ஆனால் இது அந்தக் கலவரம் குறித்த படமல்ல. மிகவும் ஜாக்கிரதையாக சொல்ல வேண்டிய கதை இது. அனைத்தையும் ஆதாரத்தோடு கொடுக்க வேண்டும் என்கிற பொறுப்போடு வேலை செய்திருக்கிறோம். காமராஜரை நான் கொச்சைப்படுத்துகிறேன் என்றார்கள்.
எந்தத் தலைவரையும் இழிவுபடுத்தி இங்கு படம் எடுக்க முடியாது. காமராஜர் மிகப்பெரிய தலைவர். நான் யாரையும் இழிவுபடுத்தவில்லை. இழிவுபடுத்த வேண்டிய அவசியமும் இல்லை. சென்சாரிலும் நிறைய கெடுபிடிகள் இருந்தன. சுயநலத்துக்காக சிலர் இதைத் தூண்டிவிட்டனர். படம் பார்த்த பிறகு அனைவருக்குமே ஒரு தெளிவு கிடைக்கும். அதன்பிறகும் நான் தப்பு செய்தேன் என்று நினைத்தால் ஜெயிலுக்கு போகக்கூட நான் தயார்.
இயக்குநர் என்ற ஆளுமை மீது எனக்குப் பெரிய மரியாதை வந்தது பாலுமகேந்திரா சாரால் தான். பொருளாதாரக் காரணங்களால் நடிக்கவும் வந்தேன். பின் தங்கிய கிராமத்திலிருந்து வந்தவன் நான். சினிமாவுக்குத் தேவையான அனைத்தையும் ஒரு தந்தையின் இடத்திலிருந்து எனக்குக் கற்றுக் கொடுத்தது பாலுமகேந்திரா சார் தான். அவரிடமிருந்து தான் வாசிப்பை நான் கற்றுக் கொண்டேன். நாம் நினைப்பதை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது வசனங்கள் தான். அதனால் அவற்றை ரசிக்கும் வகையில் கவனத்தோடு எழுதுவேன்.