பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தங்கலான்'. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மேலும் டீசர் வெளியீட்டு விழாவில், விக்ரம், பா. ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய விக்ரம், "எங்க அப்பா சொல்வார், இன்றைக்கு நடப்பது நாளைக்கு வரலாறு என்று. அதில் நல்ல விஷயங்களை நாம் கொண்டாட வேண்டும். கெட்ட விஷயங்களை மறக்கக் கூடாது. ஆனால் அது இனிமேல் நடக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும். இந்த படத்தின் முயற்சி என்னவென்றால், அடிமைத்தனத்தை பற்றி அமெரிக்கா, சைனா உள்ளிட்ட நகரங்களில் வரலாறு இருக்கிறது.
அதேபோல் இந்தியாவிலும் நம்முடைய சமுதாயத்தில் சில கெட்ட விஷயங்களும் இருக்கிறது. நிறைய நல்ல விஷயங்களும் இருக்கிறது. ஆனால் கெட்ட விஷயங்கள் ஆங்கிலேய காலத்தில் இருந்ததாக தெரியுமே தவிர சில விஷயங்கள் காலப்போக்கில் மறந்துவிடுகிறோம். இப்போது இருக்கிற தலைமுறைகளுக்கு அது பற்றி தெரியுமா என்று கூட தெரியவில்லை. அது பற்றி யோசிக்கிற பொழுது பாடமாக மட்டும் தான் இருக்கும். ஆனால் இந்த படத்தில் அழுத்தமான காட்சிகள், சோகம் அதிகம் இல்லாமல் எல்லாமே இருக்கும்.
இப்போது டைட்டானிக் படத்தில் காதல் தான் கதை. ஆனால் டைட்டானிக் கப்பலை பின்னணியில் வைத்துவிட்டு காதலை எப்படி சித்தரித்தார்கள். அதுதான் அந்த படத்தின் வலு. அதே மாதிரி இந்த படத்தில் அந்த காலகட்டத்தில் ஒரு சமுதாயம் எப்படி இருந்தது, மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை காட்டும். ஒவ்வொரு காட்சியும் மக்களை அழ வைக்க வேண்டும் என்ற நோக்கில் இருக்காது. யதார்த்தமாக உண்மையாக இருக்கும். என்ன அழகு என்றால் எந்த இடத்திலும் செட் போட்டு எடுக்கவில்லை. கே.ஜி.எஃப் பகுதியில் தங்கி எடுத்தோம். இந்த மாதிரி அனுபவம் இனி கிடைக்குமா என தெரியவில்லை. 4 மணி நேரத்திற்கு மேல் மேக்கப் இருக்கும். பயங்கர குளுரா இருக்கும். ஆனால் ஒவ்வொரு நாளும் காலையில் நடிக்க ஆர்வமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
ரஞ்சித் ஒரு பெரிய டைரக்டர். மெட்ராஸ் படத்திலிருந்து அவருடைய படங்கள் எல்லாமே ரொம்ப பிடிக்கும். எல்லாருக்கும் தெரியும் சார்பட்டா பரம்பரையில் எந்த அளவிற்கு பண்ணியிருந்தார் என்று. ஆனால் அதைவிட 100 மடங்கு இதில் பண்ணியிருக்கார். அவருடன் பணியாற்றியது அழகான அனுபவம். இந்த படம் சாதாரணமான ஒரு படமாக இருக்காது. இந்திய சினிமாவில் ஒரு புது பார்வையை உண்டாக்கும்" என்றார்.