இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சார்பில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி வாய்ப்பு மறுக்கப்பட்ட கலைஞர்களை மேடை ஏற்றி கௌரவிக்கும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு ஐந்தாவது முறையாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது.
டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிகழ்வின் நிறைவு நாளில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு கலைஞர்களை வாழ்த்தி பரிசு கொடுத்தார். அப்போது மேடையில் பேசிய அவர், “இந்த அற்புதமான நிகழ்ச்சியை தொடர்ந்து ஐந்தாவது முறையாக நடத்தி கொண்டிருக்கும் ரஞ்சித்துக்கு முதலில் நன்றி. அவர் இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக செய்து வருகிறார். இங்க வருகிற கலைஞர்கள் சந்தோஷத்துடன் வருகிறார்கள். அதை பார்க்கும் போது, ரஞ்சித் எந்தளவிற்கு ஆழமாக சிந்தித்து செயல்படுகிறார் என்பது தெரிகிறது” என்றார். பின்பு ஜெய் பீம் என்ற முழக்கத்துடன் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
பின்பு பேசிய பா.ரஞ்சித், விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்துவிட்டு, “இந்த நிகழ்வு ரொம்ப முக்கியமானது. தீவிரமாக இருக்கிற காலகட்டத்தில் இது போன்ற நிகழ்வு அவசியம். விஜய் சேதுபதியின் அதரவிற்கு நன்றி” என்றார். தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, “என்னை மாதிரி ஆட்கள் ஆதரவு கொடுப்பதை விட ரஞ்சித் மாதிரி ஆட்கள் வருவது தான் சிறப்பு. இந்த நிகழ்ச்சி ரொம்ப முக்கியம். இந்த கூட்டம் மேலும் பெருக வேண்டும்” என்றார்.