இந்திய சினிமாவில் பல பயோ-பிக் படங்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது படங்களாகவும், வெப் சீரிஸ்களாகவும் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழக்கையைத் தழுவி படங்கள் எடுக்கப்பட்டன. சமீபத்தில் கூட பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் வாழ்க்கை படமாக உருவாகிறது என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் கன்னடத்தில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க அவரது நெருங்கியவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சித்தராமையா கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சித்தராமையா, கிராமத்தில் பிறந்து சட்ட படிப்பு முடித்தவர். கடந்த 1983-ம் ஆண்டு அரசியலில் நுழைந்த இவர். பின்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்து கடந்த 2013 முதல் 2018 வரை கர்நாடக மாநில முதல்வராக ஆட்சி புரிந்தார். கடந்த 40 ஆண்டுகளில் கர்நாடகா மாநிலத்தில் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியிலிருந்த ஒரே முதல்வர் சித்தராமையா என்பது குறிப்பிடத்தக்கது.