கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அதிகபெருபான்மை இடத்தை பிடித்து ஆட்சியில் அமர்ந்தது. அன்றிலிருந்து பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசை, ‘ஒன்றிய அரசு’ என்றே தமிழக முதல்வர், தி.மு.க எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என தி.மு.கவினர் கூறி வந்தனர். அனைத்து மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா, எனவே மத்திய அரசை ஒன்றிய அரசே எனக் குறிப்பிட வேண்டும் என்று தி.மு.கவினர் கூறி வந்தனர்.
அந்த வகையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பிரதமர் மோடியின் வாழ்த்து கூறினார். அதற்கு முதல்வர், ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து, அரசின் முதல் அறிக்கை, கவுன்சில் கூட்டம், ஊடக சந்திப்பு என அனைத்திலும் ‘ஒன்றிய அரசு’ என்று தி.மு.கவினர் குறிப்பிட்டு வந்தனர். இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனாலும், தி.மு.கவை தொடர்ந்து அ.தி.மு.க, வி.சி.க, நாம் தமிழர் கட்சி என பிற கட்சிகளும் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிட்டு வந்தனர்.
இந்த நிலையில், மற்ற கட்சிகளின் வரிசையில், த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய்யும் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்து வருகிறார். கடந்த வாரம் 28 ஆம் தேதி தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்ற இந்த நிலையில், இன்று புதுச்சேரி காரைக்கால் உட்பட 19 மாவட்டங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய விஜய், “நீட் தேர்வு என்பது மாநில உரிமைக்களுக்கு எதிரானது. குறிப்பாக கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவர்கள் ரொம்பவும் பாதிக்கப்படுகிறார்கள். 1975 க்கு முன்னாடி பார்த்தால் கல்வி மாநில பட்டியலில் தான் இருந்தது. அதன் பிறகு தான் அதனை ‘ஒன்றிய அரசு’ பொதுப்பட்டியலில் சேர்த்தார்கள்.
ஒரே நாடு, ஒரே பாடத்திட்டங்கள், ஒரே தேர்வு கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிரானது. தமிழக அரசு சட்டமன்றம் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ‘ஒன்றிய அரசு’ காலதாமதம் செய்யாமல் தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சீக்கிரமாக தீர்வு காண வேண்டும். கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை மாநில அரசுகளுக்கு என்னதான் அதிகாரம் இருந்தாலும் அது முழுக்க முழுக்க ‘ஒன்றிய அரசின்’ கட்டுப்பாட்டில் தான் இருக்கு. மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். ‘ஒன்றிய அரசு’ அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு சில மெடிக்கல் காலேஜ் எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிஐ ஆகிய நிறுவனங்களில் வேண்டுமானால் நீட் எக்ஸாம் நடத்த வேண்டும் என்றால் நடத்திக் கொள்ளலாம்” என நான்கு முறை ‘ஒன்றிய அரசு’ எனக் குறிப்பிட்டு பேசினார்.