விஜய்யின் மக்கள் இயக்கம், சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் வழக்கறிஞர் அணியை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக இன்று தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டம் தொடர்வதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், "தளபதியின் சொல்லுக்கிணங்க தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று கூட்டப்பட்டிருக்கிறது. அவர்களுடன் கலந்து ஆலோசித்து எவ்வாறு இந்த அணி செயல்பட வேண்டும் என்று பேசப்படுகிறது. வாட்ஸ் ஆப் குழுக்கள் உள்ளிட்ட எல்லா தளத்திலும் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப அணியில் சுமார் 3 லட்சம் பேர் இருந்து செயல்படுகின்றனர். அவர்களுடன் ஆலோசித்து எப்படி செயல்பட வேண்டும் என்பதை எடுத்துரைத்து அதற்கேற்ப இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த அணியில் ஒரு தொகுதிக்கு குறைந்தது 6 பேர் இருப்பார்கள். அதன் அடிப்படையில் இன்று வந்திருக்கிறார்கள். மேலும் சிலர் வந்து கலந்திருக்கிறார்கள். அடுத்ததாக பல்வேறு அணிகள் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது" என்றார்.
பின்பு கூட்டத்தில், இயக்கத்தின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளை லைக் அல்லது பகிருதல் செய்யக் கூடாது என்றும் எந்த வகையிலும் தனி நபர் தாக்குதல் இருக்கக் கூடாது என்றும் மொழி, இனம், சாதி, மதம் என்ற வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல், நல்லிணக்கப் பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சமூக ஊடகங்களில் அரசியல் சமூக தலைவர்கள், திரைத்துறை சார்ந்த கலைஞர்கள் குறித்து கருத்து பரிமாற்றம் மற்றும் தர்க்கங்கள் நாகரிகத்துடனும், ஆதாரங்கள் அடிப்படையிலும், கருத்தியலாகவும், கண்ணியமான வார்த்தைகளும் பயன்படுத்தி இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.