தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனனுடன் கைகோர்த்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்திற்கு 'நதிகளிலே நீராடும் சூரியன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்த நிலையில், தற்போது 'வெந்து தணிந்தது காடு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை திருச்செந்தூரில் படக்குழு நிறைவுசெய்துள்ளது. இந்தப் படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் கலந்துகொண்டது தொடர்பாக தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சி அமைப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் சிம்பு, தயாரிப்பாளர் சங்கம், பெப்சி அமைப்பு என மூன்று தரப்பும் அமர்ந்துபேசி சுமூகத் தீர்வை எட்டியுள்ளனர். இதையடுத்து, சிம்பு நடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியது. அதனைத் தொடர்ந்து, 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை படக்குழு சென்னையில் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அழுக்கான லுங்கி மற்றும் பனியனுடன் சிம்பு காட்சியளிக்கும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகிவருகிறது.