Skip to main content

வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகும் 'மாவீரன் பிள்ளை'

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Veerappan's daughter Vijayalakshmi will debut in Maveeran Pillai as the heroine

 

கே.என்.ஆர் மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்து அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் 'மாவீரன் பிள்ளை'. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார்.

 

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு, அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா, நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் இவர்களுடன் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

 

நாயகி விஜயலட்சுமி பேசும்போது, “சின்ன வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. என்னுடைய தந்தை தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்து ஒரு முன் உதாரணமாக இருந்தவர். சமூகத்தில் ஒரு பக்கம் குடி, இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். அதனாலேயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். நிச்சயமாக என் தந்தையின் பெயருக்கு எந்தவித களங்கமும் வராமல் அவரது பெயரை காப்பாற்றுவேன்” என்று கூறினார்.

 

இயக்குநர் பேரரசு பேசும்போது, “ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் யார் எனப் பார்த்து படம் பார்க்க முடிவு செய்யாதீர்கள். படம் என்ன கருத்தை சொல்கிறது என்பதை பார்த்து படம் பாருங்கள். நம் ஊரில் முதல்வரின் மகனும் சினிமாவில் நடிக்கலாம். வீரப்பன் மகளும் நடிக்கலாம். சினிமா யார் என்றாலும் ஏற்றுக்கொள்ளும். அந்த வகையில் வீரப்பனின் மகன் விஜயலட்சுமியை ஒரு புதுமுகமாக நாம் ஆதரிப்போம். தெருக்கூத்து அழிந்து கொண்டே வருகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் டாஸ்மாக் முன்பாக குடித்துவிட்டு விதவிதமாக தெருக்கூத்து நடனங்களை குடிப்பவர்கள் ஆடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். விஜய், பிரபுதேவா இவர்களை விட குடிமகன் சூப்பரா ஆடுகிறான்” என்று கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்