'நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாகத் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாகத் தடைப்பட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, ஒரு சண்டைக்காட்சியைத் தவிர்த்து எஞ்சிய காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவுசெய்தது.
இதையடுத்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடலை படக்குழு வெளியிட்டது. இவ்விரண்டிற்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. வலிமை படத்தை வரும் தீபாவளி தினத்தையொட்டி திரைக்கு கொண்டுவரும் யோசனையில் உள்ள படக்குழு, எஞ்சியுள்ள சண்டைக்காட்சியைப் படமாக்கச் சமீபத்தில் ரஷ்யா விரைந்தது.
இந்த நிலையில், வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படக்குழு தரப்பிலிருந்து இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.