கவிஞர் வைரமுத்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டிற்கே நேரில் சென்று அவரை வாழ்த்தினார். ஆண்டுதோறும் தனது பிறந்த நாளான ஜூலை 13 ஆம் தேதி, பிரபல கவிஞர் ஒருவருக்கு ‘கவிஞர் திருநாள் விருதை’ தன் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் வழங்கி வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வகையில் இந்த வருடத்திற்கான விருது நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் இனிய உதயம் இலக்கிய இதழின் இணையாசிரியருமான ஆரூர் தமிழ்நாடனுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், நக்கீரன் ஆசிரியர், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய வைரமுத்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதன் ஒரு பகுதியில், "70 வயதை தொட்டுவிட்டேன் என காலம் சொல்கிறது. உடம்பு அப்படி சொல்லவில்லை. மனதும் அப்படி சொல்லவில்லை. உடம்பும் மனமும் இன்னும் ஒரு 20 வயதை குறைத்தே சொல்கிறது. நான் இன்னும் 50ல் இருப்பதாகவே என் உடல் என்னோடு உரையாடுகிறது.
ஏனென்றால் இந்த உடலோடு நான் உரையாடிக் கொண்டிருப்பேன். என் இருதயத்தோடு சிறுநீரகத்தோடு கல்லீரலோடு மண்ணீரலோடு கண்களோடு காதுகளோடு உரையாடிக் கொண்டிருப்பேன். உடலே, உன்னை நான் மிகுதியாக வேலை வாங்குகிறேன். உன்னை பிழிந்து எடுக்கிறேன். உன்னை அதிகமாக அவமானப்படுத்துகிறேன். உன் தாங்குதிறன் தாண்டி உன் மீது என் பொதியை ஏற்றுகிறேன். இதையெல்லாம் சகித்துக் கொண்டு என்னை மன்னித்துக் கொண்டிருக்கிறாயே. தொடர்ந்து மன்னித்துக் கொண்டு இரு என்று என் உடலோடு நான் உரையாடுவேன். ஏனென்றால் எவன் ஒருவன் தனக்குத் தானே உரையாடுகிறானோ அவனுக்கு ஆயுள் அதிகம்" என்றார்.