இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் மீரா (வயது 16) சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட மீராவின் உடலை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்துள்ளனர். அங்கே அவரது இறப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக மீரா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து போலீசார், தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் சினிமா பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மீராவின் உடல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாரதிராஜா, குஷ்பு, சிம்பு, கார்த்தி, யுவன் ஷங்கர் ராஜா, மிஷ்கின் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
மேலும் சமூக வலைத்தளங்களில் விஷால், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் இரங்கல் பதிவைப் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, அவரது எக்ஸ் தள பக்கத்தில், "கொலை என்பது மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு. தற்கொலை என்பது சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு. விஜய் ஆண்டனி மகளின் தற்கொலை சமூகத்தை எந்தப் புள்ளியில் எதிர்க்கிறது என்பதைக் கண்டறிந்து களைய வேண்டும். ஒரு பூ கிளையிலேயே தூக்கிட்டுக் கொள்வது எத்துணை பெரிய சோகம் வருந்துகிறேன். ஒரு குடும்பத்தின் சோகத்தைப் பங்கிட்டு என் தோளிலும் ஏற்றிக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.