கவிஞர் வைரமுத்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டிற்கே நேரில் சென்று அவரை வாழ்த்தினார். ஆண்டுதோறும் தனது பிறந்த நாளான ஜூலை 13 ஆம் தேதி, பிரபல கவிஞர் ஒருவருக்கு ‘கவிஞர் திருநாள் விருதை’ தன் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் வழங்கி வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வகையில் இந்த வருடத்திற்கான விருது நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் இனிய உதயம் இலக்கிய இதழின் இணையாசிரியருமான ஆரூர் தமிழ்நாடனுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், நக்கீரன் ஆசிரியர், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய வைரமுத்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அப்போது தமிழ் மற்றும் தமிழர்கள் குறித்து பேசிய வைரமுத்து, "தமிழ் தனியாக வளராது. தமிழனால் தான் தமிழ் வளரும். தமிழனை ஆதரித்தால் தமிழை ஆதரிப்பதாக அர்த்தம். ஒவ்வொரு தமிழனையும் நேசிக்கிறேன். காரணம், தமிழன் இல்லையென்றால் இந்த தமிழுக்கு ஏது கதி. அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். தமிழர்களே உங்கள் மனதை உங்கள் வசம் வைத்திருங்கள்.
படுக்கையில் படுத்தவுடன் ஏழாவது நிமிடம் தூங்கிவிட்டால் மனம் உங்களோடு இருக்கிறது என்று அர்த்தம். 7 நிமிடங்களுக்கு மேல் உறக்கம் வரவில்லை என்றால் மனமோ உடலோ உங்களை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். ஆகவே எம் தமிழர்கள் படுத்த 7வது நிமிடத்தில் உறங்கிவிடும் மனதை பெற்றிருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள். அந்த உற்சாகம், அந்த மகிழ்ச்சி வேறெதிலும் வராது. இதை ஆன்மிகம், அரசியல், விஞ்ஞானம் என எதுவும் சொல்லாது. கவிதை தான் சொல்லும். தமிழ் தான் சொல்லும். எனவே தமிழ் சொல்வதை கேளுங்கள். கவிதை சொல்வதை கேளுங்கள். மகிழ்ச்சியோடு இருங்கள்" என்றார்.