Skip to main content

‘அந்த ஏழு ஆண்டுகள் செய்வது அறியாமல் இருந்தேன்’- வைரமுத்து 

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த திரு. கே. பாலசந்தர் அவர்கள். இவரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். 
 

vairamuthu

 

 

விழாவில் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, " ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது . 
 

என்ன செய்வது என்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன் . காரணம் நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது. அந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி முப்பத்தி ஏழு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை.
 

அந்த நிலையில் ஒரு நாள் பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது . போனால் திலீப் என்ற புது இசை அமைப்பளார். பாலச்சந்தரின் மூன்று படங்களுக்கு என்  பாடல். திலீப்பின் இசை . மூன்று  படத்திலும் பாடல்கள் ஹிட் . திலீப்தான் ஏ ஆர் ரகுமான் . மீண்டும் களம் எனக்கு வந்தது.
 

திரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா . மீட்டெடுத்தவர் பாலச்சந்தர். புன்னைகை மன்னன் படத்தில் என்ன சத்தம் இந்த நேரம் பாடலில் ஆதரவாய் சாய்ந்து விட்டாள் ஆரிரரோ பாடு என்ற வரிகளின் கேமராவை தாலாட்டிய தொழில் நுட்ப மேதை அவர். 
 

பாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அதை அரசே செய்ய வேண்டும் . பாலச்சந்தர் மட்டுமல்ல பல சாதனையாளர்களின் சாதனைகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அது பாலச்சந்தரில் இருந்து துவங்க வேண்டும் " என்றார். 
 

இவ்விழாவில், சமுத்திரக்கனி, கலைப்புலி எஸ் தாணு, விவேக், டெல்லி கணேஷ்,  சச்சு, மனோபாலா, இயக்குனர் பேரரசு, ரமேஷ் கண்ணா, இயக்குனர் சுரேஷ் , எம் எஸ் பாஸ்கர், ராஜேஷ், ஆர் கே செல்வமணி, ஆர் வி உதயகுமார், படவா கோபி, கணேஷ் ஆர்த்தி, இயக்குனர் அஸ்லாம், ஐந்து கோவிலன், மற்றும் நூற்றுக்கணக்கான சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு இயக்குனர் சிகரத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்