
'ஒரு அடார் லவ்' படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி இணயதளங்களை தெறிக்க விட்டு கொண்டிருக்கிறது. இப்பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ள நடிகை பிரியா வாரியார் கண்ணடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி இளைஞர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.இதன் மூலம் ஒரே நாளில் இந்திய அளவில் முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக பிரபலமாகி விட்டார் பிரியா வாரியர். இதுவரை பாடலை யுடியூப்பில் பார்த்தவர்கள் எண்ணிக்கை மட்டும் ஒன்றரை கோடியை தாண்டி உள்ளது. இந்நிலையில் 'ஒரு அடார் லவ்' படத்தை மற்ற மொழிகளில் ‘டப்பிங்’ செய்து வெளியிட தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் கேரளாவில் முகாமிட்டு டப்பிங் உரிமைக்கு விலைபேசி வருகிறார்கள். தெலுங்கில் வெளியிட படக்குழுவினர் இரண்டு கோடி கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் இந்த படத்துக்கு ஆன மொத்த செலவே இரண்டு கோடிக்கும் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் கண்ணடிக்கும் பாடல் காட்சிக்காக மற்ற மொழிகளில் வெளியிட அதிக விலை பேசுகின்றனர் என்றார் ஒரு மலையாள தயாரிப்பாளர். இந்த படம் திரைக்கு வரும் முன்பே கோடிக்கணக்கான லாபம் கொட்டுவதால் தயரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.