அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புபடுத்திப் பேசியிருந்தார். மேலும் கருணாஸ் குறித்தும் அவதூறாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில், திரைத்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்த த்ரிஷா, “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் இறங்கி தரம் தாழ்ந்து பேசும் இதுபோன்ற மனிதர்களை தொடர்ச்சியாக பார்ப்பதற்கு அறுவறுப்பாக உள்ளது. இந்த அவதூற்றுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனி இவ்விவகாரம் தொடர்பாக எனது சட்ட ஆலோசகரே பேசுவார்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து த்ரிஷாவிற்கு ஆதரவாக சேரன், ஃபெப்சி அமைப்பு, மன்சூர் அலிகான், விஷால், தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்டோர் குரல் கொடுத்தனர். இதனிடையே முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் த்ரிஷா தரப்பு வழக்கறிஞர் ஏ.வி ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பான நோட்டீஸை தனது எக்ஸ் பக்கத்தில் த்ரிஷா பகிர்ந்துள்ளார். அதில், “இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 24 மணி நேரத்தில் பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ், ஆங்கில செய்தித்தாள்களில் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும். மேலும் தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்களிலும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
pic.twitter.com/DmRXHibIYx— Trish (@trishtrashers) February 22, 2024