கரோனா நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டன. இருப்பினும் கரோனா குறித்த அச்சம் தொடர்ந்து நிலவி வருவதால், 50 சதவிகிதப் பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால், பெரும்பாலான திரையரங்குகள், ரசிகர்கள் வரவின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் மாஸ்டர் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு 100 சதவித இருக்கைகளுடன் திரையரங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதற்கு ஒரு பக்கம் ஆதரவும் மறுபக்கம் எதிர்ப்பும் கிளம்பின.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் 100 சதவித இருக்கைகளுடன் திரையரங்கம் இயங்குவதை மறுபரீசிலனை செய்யும்படி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி தமிழக அரசு மறு அறிவிப்பு வரும் வரை திரையரங்குகள் 50 சதவித இருக்கைகளுடனே திரையரங்கங்களை இயக்குமாறு அறிவித்துள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
இதனிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை - காஞ்சிபுரம் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் டி.ராஜேந்தர் ஒரு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஐயாவுக்கு ஒரு வேண்டுகோள். மக்கள் நலனைக் கட்டிக் காக்க வேண்டும் என்பதற்கு ஒரு சின்ன தூண்டுகோல். பொங்கல் விடுமுறைக்குத் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதித்து தமிழக அரசு கொடுத்தது அறிக்கை. ஆனால், துரதிருஷ்டவசமாக 50%தான் அனுமதிக்க வேண்டும் என்று விதித்துவிட்டது மத்திய அரசு தணிக்கை.
மத்திய அரசு 50%தான் இருக்கைகள் அனுமதிக்க வேண்டும் என்று சொல்கிறது. அப்படியென்றால், நாங்கள் ஏன் முழுமையாக 12% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். திரையரங்குகள் நிறைய டிக்கெட் கொடுக்கக் கூடாது. ஆனால், ஜிஎஸ்டி மட்டும் முழுமையாகச் செலுத்த வேண்டும். என்னங்க இது கொடுமை.
தமிழகத்தில் ஒரு சில ஊர்களில் மட்டுமே கடற்கரை இருக்கிறது. அந்தக் கரையை விட்டால் மக்களுக்கு இருக்கும் இன்னொரு பொழுதுபோக்கு சினிமா. மக்களுக்குப் பொழுதுபோக்கிற்கு வேறு என்ன வழி இருக்கிறது. ஒரு சினிமா டிக்கெட்டை எடுத்துக் கொண்டால், அவர்கள்தான் கட்ட வேண்டும் வரி. அவர்கள் தலையில் ஏற்றிக் கொண்டே இருக்கிறீர்கள் வரி. ஆகையால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான 8% கேளிக்கை வரியை நீக்க வேண்டும். எங்கள் கலையுலகினரின் கஷ்டத்தைப் போக்க வேண்டும். மக்களின் உணர்வைக் கட்டிக் காக்க வேண்டும்” என்றார்.