'யாமிருக்க பயமேன்’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களின் இயக்குனரான டீகே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'காட்டேரி'. வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன் உட்பட பிரபலமான நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராக இருந்தநிலையில், கரோனா நெருக்கடி காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால், படத்தைத் திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது. ஊடரங்கு காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், இப்படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட முடிவெடுத்தார் அப்படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா. அதனைத் தொடர்ந்து சில முன்னணி ஓ.டி.டி. நிறுவனங்களுடன் இதற்கான பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. பின்னர், படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக கரோனா இரண்டாம் அலை குறித்த அச்சம் நிலவுவதால், படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுகிறது எனத் தயாரிப்பு தரப்பிலிருந்து அறிக்கை வெளியானது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட இவ்வறிக்கை குறித்து, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், " ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வருத்தமளிக்கிறது. படம் வெளியிடுவது, வெளியிடாமல் இருப்பது எல்லாம் அவர்களுடைய விருப்பம். எங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக வெளியிடவில்லை எனக் கூறியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு கரோனா இரண்டாம் அலை என்று தேவையில்லாத வதந்தியைப் பரப்புவது மிகவும் கவலையளிக்கிறது. மத்திய அரசின் சுகாதாரத் துறைக் குழுவினர் நேற்றைய முன்தினம் நடத்திய கூட்டத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் கலந்துகொண்டார்கள். அதில் கரோனாவின் 2-வது அலை இந்தியாவில் பரவ வாய்ப்பில்லை என்று மத்திய அரசு கூறியது. நேற்றைய தினம் வெளியான 'வொண்டர் வுமன்' படத்துக்கு என்ன வரவேற்பு இருந்தது என்பது இவர்களுக்குத் தெரியாது. திருப்பூரில் உள்ள எனது திரையரங்கில் 'வொண்டர் வுமன்' திரைப்படம் 2 காட்சிகள் திரையிடப்பட்டதில் 811 பேர் வந்து படம் பார்த்துள்ளனர். படத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்போதுதான் திரையரங்கிற்கு மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து இத்தகைய செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனப் பேசியுள்ளார்.