தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் 9 வருடங்கள் கழித்து ஒரே தேதியில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதனால் அவர்களது ரசிகர்களைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் பார்வையும் தற்போது 'வாரிசு' மற்றும் 'துணிவு' படங்களை நோக்கி உள்ளது.
இருவரின் ரசிகர்களும், அவர்களது விருப்ப நடிகர்களின் படங்கள் தனித்தனியே வெளியானாலே பேனர், பட்டாசு என்று திருவிழாவாகவே மாற்றிவிடுவார்கள். இப்போது இருவரின் படங்களும் பொங்கலை முன்னிட்டு ஒன்றாக வெளியாகியுள்ளதால், திரையரங்கம் மற்றும் முக்கியமான பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பேனர், போஸ்டர், பட்டாசு என்று போட்டிப் போட்டு பட்டையைக் கிளப்பி வருகின்றனர். அதன்படி அஜித்தின் துணிவு படம் இன்று (11.01.2023) அதிகாலை 1 மணிக்கும், விஜய்யின் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கும் சிறப்புக் காட்சிகளாகத் திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் சிறப்புக் காட்சி பார்ப்பதற்கு இரு நடிகர்களின் ரசிகர்களும் திரையரங்கு முன்பு கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களின் விருப்ப நடிகர்களின் படத்தைப் பார்க்க ஆர்வ மிகுதியில் இருந்த ரசிகர்கள் திரையரங்கின் நுழைவு வாயிலில் இருந்த கண்ணாடிக் கதவுகளைத் திறக்கச் சொல்லித் தள்ளியுள்ளனர். உட்புறம் நிறைய பவுன்சர்கள் தடுத்து நிறுத்த முயன்றும், அவர்களை மீறி ரசிகர்கள் உள்ளே வர முற்பட்டதால் கண்ணாடிக் கதவுகள் உடைக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் கடந்த வருடம் வெளியான அஜித்தின் 'வலிமை' படத்தின்போது ரசிகர்களால் கண்ணாடி நொறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.