தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் பா.ரஞ்சித் 'நீலம் புரொடக்சன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பல படங்களை தயாரித்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த 'பொம்மை நாயகி' படத்தை தயாரித்திருந்தது.
இந்த நிலையில், 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தனது இரண்டாவது படமாக இயக்கவுள்ளார். முதன்மை கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் நடிக்கவுள்ளனர். அதியன் ஆதிரையின் முதல் படத்தையும் பா.ரஞ்சித் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரித்விகா, ஷபீர், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். தண்டகாரண்யம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். இதனை ஒரு போஸ்டர் மூலம் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பா.ரஞ்சித்தின் முதல் படத்தில் ஹீரோவாக தினேஷ் நடித்திருந்த நிலையில், அவரது தயாரிப்பில் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது மீண்டும் அவர் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் என்பது நினைவுகூறத்தக்கது.