
எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 34 வயதே ஆன சுசாந்த், தனது பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹிந்தி டி.வி. சீரியலில் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன்பின் டி.வி. சீரியலிருந்து விடைபெற்று சினிமாக்களில் நடிக்க தொடங்கினார்.
'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுசாந்த், சில வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரு சேர ருசித்துள்ளார். அவரது மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் பல சர்ச்சைகள், கிளர்ச்சிகள் உருவாகியுள்ளன என்றே சொல்லலாம். பலரும் சுசாந்தின் மரனம் தற்கொலை அல்ல கொலை, ஹிந்தி சினிமா துறையிலிருக்கும் வாரிசுகளால் ஒதுக்கப்பட்டதால்தான் இந்த முடிவை எடுத்துக் கொண்டார் என்று தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் சுசாந்த் நடித்து வெளியாக இருந்த கடைசி படம் ‘தில் பேசாரா’ படம் ஜூலை 24ஆம் தேதி நேரடி டிஜிட்டல் ரிலீஸ் செய்யப்படும் என்று டிஸ்னி ப்ளஸ் நிறுவனம் தெரிவித்தது. 'ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்னும் ஆங்கில நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆங்கிலப் படத்தின் ஹிந்தி ரீமேக்தான் இப்படம். ஃபாக்ஸ் ஸ்டார்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுசாந்திற்கு மரியாதைச் செலுத்தும் விதமாக இந்தப் படத்தை இலவசமாக வெளியிடுவதாக டிஸ்னி ப்ளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த 'தில் பேச்சாரா' ட்ரைலர் நேற்று மாலை நான்கு மணிக்கு இணையத்தில் வெளியானது. இன்னும் 24 மணிநேரம் முடிவடையாத நிலையில் இப்படத்தின் ட்ரைலரை 2.50 கோடி பேர் பார்த்துள்ளனர். மேலும், 50 லட்சம் பேருக்கும் மேல் இதனை லைக் செய்துள்ளது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இதுவரை அதிகப்படியாக லைக்ஸ் வாங்கிய பட ட்ரைலர்களில் முதல் இடத்தில் விஜய் நடித்த 'பிகில்' (25 லட்சம் பர்வையாளர்கள்) படமும் அதனைத் தொடர்ந்து ஷாருக் நடித்த 'ஜீரோ' படத்தின் ட்ரைலரும் இருந்தது. மேலும், உலகளவிலும் 'அவஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி' வார் ஆங்கில ட்ரைலரின் சாதனையையும் 'தில் பேச்சாரா' ட்ரைலர் முறியடித்துள்ளது.